×

அதிகாரம் ஒருவரிடமே இருக்காது. ஒருநாள், அதிகாரம் அனைவரிடமிருந்தும் பறிக்கப்படும்... அமித் ஷாவை எச்சரித்த ஓவைசி

 

அதிகாரம் ஒருவரிடமே இருக்காது. ஒருநாள், அதிகாரம் அனைவரிடமிருந்தும் பறிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி எச்சரித்தார்.

குஜராத் மாநிலம் கெடா மாவட்டத்தின் மஹூதா நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில், குஜராத் மாநிலம் 22 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததற்கு, அங்கு நடந்த வகுப்புவாத கலவரத்துக்கு காரணமானவர்களுக்கு பாடம் கற்பிக்கப்பட்டதுதான் என்று தெரிவித்து இருந்தார். அமித் ஷாவின் இந்த பேச்சுக்கு ஹைதராபாத் எம்.பி.யும். ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவருமான அசாதுதீன் ஓவைசி பதிலடி கொடுத்துள்ளார்.  குஜராத்தின் மிகப்பெரிய முஸ்லிம் பகுதியான ஜுஹராபுராவில் நடைபெற்ற கூட்டத்தில் அசாதுதீன் ஓவைசி பேசுகையில் கூறியதாவது: 2002ல் குஜராத்தில் கலவரம் செய்தவர்களுக்கு பாடம் கற்பித்ததாகவும், மாநிலத்தில் நிரந்தர அமைதியை பா.ஜ.க. ஏற்படுத்தியதாகவும் அமித் ஷா இன்று ஒரு பொதுக்கூட்டத்தில் தெரிவித்தார். 

இந்த தொகுதியின் எம்.பி.யான அமித் ஷாவுக்கு நான் சொல்ல விரும்புகிறேன், 2002ல் நீங்கள் கற்பித்த பாடம், பில்கிஸின் பலாத்கார குற்றவாளிகளை உங்களால் விடுவிக்கப்படுவீர்கள் என்பதுதான். பில்கிஸின் மூன்று வயது மகளின்  கொலைக்காரர்களை விடுவிப்பீர்கள் என்பதே நீங்கள் கற்பித்த பாடம். அஹ்சன் ஜாஃப்ரி கொல்லப்படலாம் என்பதையும் நீங்கள் எங்களுக்கு கற்றுக் கொடுத்தீர்கள். 

அமித் ஷா உங்களின் எத்தனை பாடங்களை நாங்கள் நினைவில் கொள்ள வேண்டும்? ஆனால் நினைவில் கொள்ளுங்கள்?, பாடம் கற்பிப்பது ஒன்றும் இல்லை, அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கும்போது அமைதி வலுவடைகிறது. அதிகாரம் ஒருவரிடமே இருக்காது. ஒருநாள், அதிகாரம் அனைவரிடமிருந்தும் பறிக்கப்படும். அதிகார போதையில் நாங்கள் பாடம் கற்பித்தோம் என்று உள்துறை அமைச்சர் இன்று கூறுகிறார். நீங்கள் என்ன பாடம் கற்பித்தீர்கள்?. நாடு முழுவதும் நீங்கள் கெட்டப்பெயர் எடுத்தீர்கள். டெல்லியில் வகுப்புவாத கலவரம் நடந்ததாக நீங்கள் என்ன பாடம் கற்பித்தீர்கள்? இவ்வாறு அவர் தெரிவித்தார்.