பா.ஜ.க. குறித்து அவதூறு பேச்சு.. ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சதாவுக்கு நோட்டீஸ் அனுப்பிய அசோக் சரீன்..
பா.ஜ.க. குண்டர்கள் மற்றும் ரவுடிகளின் கட்சியாக மாறி விட்டது என்று பேசியதற்கு மன்னிப்பு கேட்கக்கோரி ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சதாவுக்கு பா.ஜ.க.வின் அசோக் சரீன் நோட்டீஸ் அனுப்பினார்.
ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்.பி.யும், டெல்லி ஜல் (தண்ணீர்) வாரிய துணை தலைவருமான ராகவ் சதா கடந்த 16ம் தேதியன்று செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார். அப்போது ராகவ் சதா பேசுகையில், பா.ஜ.க. குண்டர்கள் மற்றும் ரவுடிகளின் கட்சியாக மாறி விட்டது என்றும், பா.ஜ.க. என்பது பாரத்தை அறியாதவர்கள் கட்சி என்று குறிப்பிட்டார். ராகவ் சதாவின் இந்த பேச்சு அவருக்கே பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது.
பா.ஜ.க. குறித்து அவதூறாக பேசியதற்கு மன்னிப்புக் கோரி ராகவ் சதாவுக்கு பா.ஜ.க. நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பஞ்சாப் பா.ஜ.க. இளைஞரணி துணை தலைவர் அசோக் சரீன் அனுப்பியுள்ள சட்டப்பூர்வ நோட்டீஸில், ராகவ் சதா தனது பேச்சுக்கு 3 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், தவறினால் சிவில் மற்றும் கிரிமினல் புகார் பதிவு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
பொய்யாகவும், தீங்கிழைக்கும் வகையிலும் நற்பெயரை குறைத்து, சமூக மக்களின் மனதில் பா.ஜ.க.வுக்கு எதிராக மோசமான எண்ணத்தை உருவாக்கியுள்ளீர்கள். உங்கள் தரப்பில் உள்ள பேச்சுக்கள் இழிவானவை, அவதூறானவை மற்றும் ஒட்டுமொத்த பா.ஜ.க.வின் குணாதிசய படுகொலைக்கு சமமானவை என்று சதாவுக்கு அனுப்பியுள்ள நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.