×

மனைவி, மகனிடம் கேட்டு அறிக்கை விடவும்.... ப.சி.க்கு எச். ராஜா அறிவுறுத்தல்

 

நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கக் கோரி கடந்த ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்தில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  ஆளுநர் அந்த மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் 142 நாட்களுக்குப் பின்னர் மீண்டும் தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பி இருந்தார்.  இதையடுத்து தமிழ்நாடு சட்டமன்றத்தில்  சிறப்பு கூட்டம் கூட்டப்பட்டு மீண்டும் நீட் விலக்கு   மசோதா நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. 

அரசியல் சட்ட விதிகளின்படி ஒரு மசோதா இரண்டாவது முறையாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டால் ஆளுநர் உடனே அதன் மீது நடவடிக்கை எடுத்து குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய ஆக வேண்டும் என்று வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில்,  நீட் தேர்வை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றிய மசோதாவை நான் வரவேற்கிறேன்.  நீட் தேர்வில் உள்ள குறைகளையும் பாகுபாட்டையும் பல முறை எடுத்துச் சொல்லியாகிவிட்டது என்று முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ள கருத்துக்கு,  நீட் தேர்வில் உள்ள நிறைகளையும், பாகுபாடற்ற தன்மையையும் பல முறை நீதிமன்றத்திலும், தொலைக்காட்சியிலும்  மூத்த வழக்கறிஞர் நளினி சிதம்பரம் எடுத்துச் சொல்லியாகி விட்டது. உங்களின் இந்த கோரிக்கையை திரும்ப பெற வேண்டும் என்று  பதிலடி கொடுத்திருக்கிறார் தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி.

நம் மாநிலம், நமது  அரசுக் கல்லூரிகள், நமது மாணவர்கள், யாரைத் தேர்வு செய்து அனுமதிப்பது என்பது நம்முடைய அதிகாரம் அல்லவா? தமிழ்நாடு ஆளுநர் இந்த மசோதாவிற்கு உடனடியாக ஒப்புதல் தர வேண்டும் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ள கருத்துக்கு,  நம் மாநிலத்தில், நம் அரசுக் கல்லூரிகளில், நமது மாணவர்களுக்கு தான் அனுமதி என்பது சட்டம், விதி. இது கூட முன்னாள் நிதியமைச்சருக்கு தெரியாதா? அல்லது தெரிந்தும் மக்கள் முட்டாள்கள் என்று எண்ணி பொய் சொல்கிறாரா? இது தான் காரணம் என்றால் இதற்கு ஒப்புதல் தேவையில்லை என்கிறார் நாராயணன் திருப்பதி.

ப.சிதம்பரத்தின் இந்த பதிவுக்கு,  பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா,  ‘’தயவு செய்து தங்கள் மனைவி மற்றும் மகனிடம் அறிவுரை கேட்டு அறிக்கை விடவும். வயதாவதால் வருகின்ற இது போன்ற பிரச்சினைகளை தவிற்க அது உதவும். 2013 ல் தாங்கள் பதவி வகித்த ஐமுகூ தான் நீட் கொண்டு வந்தது என்பது உங்களுக்கு மறந்திருக்கலாம்’’என்று தெரிவித்திருக்கிறார்.