×

எந்தவொரு முஸ்லிம் ஆணும் மூன்று பெண்களை திருமணம் செய்து கொள்ளக் கூடாது.. அசாம் பா.ஜ.க. முதல்வர்

 

எந்த ஒரு முஸ்லிம் ஆணும் மூன்று பெண்களை திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்பதில் எனது அரசு தெளிவாக உள்ளது என அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்தார்.

அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா நேற்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியதாவது: எந்த ஒரு முஸ்லிம் ஆணும் மூன்று பெண்களை திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்பதில் எனது அரசு தெளிவாக உள்ளது. தலாக் கொடுக்காமல் சட்டப்பூர்வமாக விவகாரத்து கொடுக்க வேண்டும். மகன்களை போன்று மகள்களுக்கும் சொத்தில் சம பங்கு வழங்கப்பட வேண்டும். சொத்தில் 50 சதவீத பங்கை மனைவிக்கு கொடுங்கள். 

அரசாங்கம் மற்றும் சாதாரண முஸ்லிம்களின் கருத்துக்கள் ஒன்றே. பிற இடங்களில் இருந்து இடம் பெயராத முஸ்லிம்கள் உள்பட பழங்குடி சிறுபான்மையினருக்கான தனி வகைப்பாடு குறித்து ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் மாநில அமைச்சரவை முடிவு செய்யும். அசாம் அதன் பயணத்தின் மற்றொரு பகுதியில் உள்ளது. அசாமுக்கு இடம்பெயராத மற்றொரு சிறுபான்மையினரை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளோம். அவர்கள் இந்த மண்ணுக்கு அசல். புலம்பெயர்ந்த நிலையை பொருட்படுத்தாமல், பௌத்தர்கள், ஜெயின்கள், பார்சிகள் மற்றும் பிற சமூகங்களுடன் முஸ்லிம்களும் தற்போது சிறுபான்மையினராக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். 

எதிர்வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் முக்கிய எதிர்க்கட்சி அந்தஸ்தை காங்கிரஸ் தக்கவைத்துக் கொள்வது கடினம். எனது சொந்த மதிப்பீட்டின்படி, 2024ல் காங்கிரஸின் எண்ணிக்கை 30 முதல் 35 இடங்களாக குறையும். காங்கிரஸ் கட்சி தற்போது முற்றிலும் பலவீனமாக அரசியல் அமைப்பாக மாறியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.