அதிருப்தி சிவ சேனா,சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் மகாராஷ்டிராவில் ஆட்சியை பிடிக்கும் பா.ஜ.க.?
மகாராஷ்டிராவில் அதிருப்தி சிவ சேனா எம்.எல்.ஏ.க்கள் மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் பா.ஜ.க. மீண்டும் ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மகாராஷ்டிராவில் தற்போது முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசாங்கம் நடைபெற்று வருகிறது. அண்மையில் நடைபெற்ற மாநிலங்களவை தேர்தல் மற்றும் மகாராஷ்டிரா சட்டமேலவை தேர்தலில் ஆளும் மகா விகாஸ் அகாதி கூட்டணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. இந்த தேர்தல்களில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறி பா.ஜ.க.வுக்கு வாக்களித்தனர்.
இந்த சூழ்நிலையில், சிவ சேனாவின் செல்வாக்கு மிக்க தலைவரும், அம்மாநில அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சுமார் 35 பேருடன் ரகசியமாக குஜராத் மாநிலம் சூரத் ஹோட்டல் சென்று தங்கினார். அவர்கள் அனைவரும் சிவ சேனா கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இதனையடுத்து ஏக்நாத் ஷிண்டே மற்றும் அவருடன் தொடர்பில் உள்ள எம்.எல்.ஏ.க்களை தொடர்பு கொள்ள சிவ சேனா முயற்சி மேற்கொண்டது ஆனால் முடியவில்லை. இதனையடுத்து சிவ சேனாவின் மூத்த தலைவர் ஒருவர் சூரத் ஹோட்டலுக்கு சென்று ஏக்நாத் ஷிண்டேவை சந்தித்து பேசினார். மேலும் போன் வாயிலாக உத்தவ் தாக்கரேவிடம் ஏக்நாத் ஷிண்டேவை பேச வைத்தார். அப்போது, பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க தயார் என்றால் சிவ சேனா கட்சியில் பிளவு ஏற்படாது என உத்தவ் தாக்கரேவிடம் ஏக்நாத் ஷிண்டே உறுதியாக தெரிவித்தார். ஆனால் உத்தவ் தாக்கரே பா.ஜ.க.விடம் கூட்டணி வைக்க தயாராக இல்லை என தகவல்.
இந்த சூழ்நிலையில் நேற்று நள்ளிரவு சூரத் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டு இருந்த ஏக்நாத் ஷிண்டே மற்றும் அதிருப்தி சிவ சேனா எம்.எல்.ஏ.க்கள் திடீரென அசாம் மாநிலத்துக்கு மாற்றப்பட்டனர். இந்நிலையில், மகாராஷ்டிராவின் ஆட்சியை அமைக்கும் வேளையில் பா.ஜ.க. களம் இறங்கியுள்ளதாக தகவல். பா.ஜ.க.வுக்கு தற்போது 106 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். சிவ சேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் பா.ஜ.க. அந்த மாநிலத்தில் மீண்டும் ஆட்சி அமைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. ஏக்நாத் ஷிண்டே மற்றும் அவருடன் இருக்கும் அதிருப்தி சிவ சேனா எம்.எல்.ஏ.க்கள் கடைசி வரை பா.ஜ.க.வுக்கு ஆதரவு அளிப்பதில் உறுதியாக இருந்தால், அந்த மாநிலத்தில் தாமரை மீண்டும் மலரும் என அரசியல் ஆர்வலர்கள் கணித்துள்ளனர்.