மேற்கு வங்கத்தில் டிசம்பருக்கு பிறகு மம்தா கட்சி ஆட்சியில் இருக்காது.. பா.ஜ.க. எம்.எல்.ஏ. அக்னிமித்ரா பால் உறுதி
மேற்கு வங்கத்தில் டிசம்பருக்கு பிறகு முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் இருக்காது என பா.ஜ.க. எம்.எல்.ஏ. அக்னிமித்ரா பால் தெரிவித்தார்.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று தொடர்ந்து மூன்றாவது முறையாக முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் ஆட்சி அமைத்தது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக பா.ஜ.க.வினர் மம்தா பானர்ஜி அரசு நீண்ட காலம் நீடிக்காது என்று கூறிவருகின்றனர். இந்நிலையில், டிசம்பருக்கு பிறகு திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் இருக்காது என்று பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க பா.ஜ.க. எம்.எல்.ஏ. அக்னிமித்ரா பால் செய்தியாளர்களிடம் கூறியதாவது: டிசம்பரில் இங்கு (மேற்கு வங்கத்தில்) ஒரு விளையாட்டு இருக்கும். 30க்கும் மேற்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் எங்கள் கட்சியுடன் தொடர்பில் உள்ளனர். டிசம்பருக்கு பிறகு அவர்களின் அரசு நீண்ட காலம் தொடராது என்பது அவர்களுக்கு தெரியும். அவர்களின் இருப்பு ஆபத்தில் உள்ளது. உத்தி சொல்ல மாட்டோம், ஆனால் ஏதாவது நடக்கும்.
டிசம்பரில் பெரிய விளையாட்டு இருக்கும் என்று எங்கள் தலைமை பலமுறை கூறி வருகிறது. நாங்கள் (மேற்கு வங்கத்தினர்) நிதி நெருக்கடியை நோக்கி நகர்கிறோம். இது ஒரு திவாலான அரசு. அவர்களிடம் பணம் இல்லை. அவர்கள் எப்படி வேலை செய்வார்கள்?. அரசை நடத்துபவர்களில் 50 சதவீதம் பேர் சிறையில் உள்ளனர். மீதமுள்ள 50 சதவீதம் பேர் சிறைக்கு செல்வார்கள். ஆட்சியை யார் நடத்துவார்கள்?. இவ்வாறு அவர் தெரிவித்தார்.