×

பள்ளி வார விடுமுறை வெள்ளிக்கிழமையாக மாற்றம்.. ஜார்க்கண்ட் இஸ்லாமிய நாடாக மாறுகிறது... பா.ஜ.க. எம்.பி. எச்சரிக்கை

 

ஜார்க்கண்டில் பள்ளி வார விமுறை வெள்ளிக்கிழமையாக மாற்றப்பட்டுள்ளதை குறிப்பிட்டு, ஜார்க்கண்ட் இஸ்லாமிய நாடாக மாறுகிறது என்று பா.ஜ.க. எம்.பி. நிஷிகாந்த் துபே எச்சரிக்கை செய்தார்.

ஜார்க்கண்டில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில், ஜே.எம்.எம்.-காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தில் சில உருது  நடுத்தர பள்ளிகள் தங்களது வார விடுமுறையை ஞாயிற்றுக்கிழமைக்கு வெள்ளிக்கிழமையாக மாற்றினர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது இதனையடுத்து சில பள்ளிகள் வார விடுமுறையை ஞாயிற்றுக்கிழமையாக மாற்றின.

பள்ளிகள் வார விடுமுறையை வெள்ளிக்கிழமையாக மாற்றியதை குறிப்பிட்டு, ஜார்க்கண்ட் இஸ்லாமிய நாடாக மாறுகிறது என பா.ஜ.க. எம்.பி. நிஷிகாந்த் துபே குற்றம் சாட்டினார். பா.ஜ.க. எம்.பி. நிஷிகாந்த் துபே செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜார்க்கண்ட் இஸ்லாமிய நாடாக மாற்றப்படுகிறது. இது ஒரு சதி. தேசிய புலனாய்வு முகமையை விசாரணைக்கு அழைக்க வேண்டும். காங்கிரஸூம், ஜே.எம்.எம்.-ம் இதில் ஒன்றாக இருக்கிறது. பாகிஸ்தானாக இருந்தாலும் சரி, சீனாவாக இருந்தாலும் சரி அவர்கள் வெற்றி பெற யாருடையை உதவியையும் பெறுவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார். முன்னதாக பா.ஜ.க. எம்.பி. நிஷிகாந்த் துபே கடந்த வெள்ளிக்கிழமையன்று நாடாளுமன்ற மக்களவையில்  ஜார்க்கண்ட் பள்ளிகளில் விடுமுறை தினம்  மாற்றப்பட்டது குறித்து பேசினார். 

அப்போது  நிஷிகாந்த் துபே மக்களவையில் கூறியதாவது: திடீரென்று ஜார்க்கண்ட் முழுவதும் குறைந்தது 1,800 பள்ளிகள் தங்கள் பெயர்களில் உருது என்ற வார்த்தையை சேர்த்துள்ளன. இப்போது இந்த பள்ளிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை இல்லை என்று ஜார்க்கண்ட் அரசு அமைத்த குழுவின் அறிக்கை வந்துள்ளது.  நாடு இஸ்லாமியமயமாக்கலை நோக்கி நகர்கிறது, ஜார்க்கண்ட் வழியை காட்டியுள்ளது. இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, பள்ளிகளின் பெயர்களில் உருதுவை சேர்த்து வாரந்திர விடுமுறையை வெள்ளிக்கிழமையாக மாற்றிய பள்ளிகளுக்கு நிதியுதவியை நிறுத்த வேண்டும் என்பது மத்திய அரசு எனது பணிவான வேண்டுகோள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.