×

அரசின் திருப்திப்படுத்தும் கொள்கையின் விளைவு உதய்பூர் சம்பவத்தில் தெரிகிறது, கெலாட் அரசு தூங்குகிறது.. பா.ஜ.க.
 

 

ராஜஸ்தான் காங்கிரஸ் அரசின் திருப்திப்படுத்தும் கொள்கையின் விளைவு உதய்பூர் சம்பவத்தில் தெரிகிறது. கெலாட் அரசு தூங்குகிறது என பா.ஜ.க. குற்றம் சாட்டியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் டெய்லராக இருப்பவர் கண்ணையா லால். இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவாக பேஸ்புக்கில் பதிவு ஒன்றை எழுதியிருந்ததாக கூறப்படுகிறது. மேலும், நுபுர் சர்மாவின் புகைப்படத்தை முகநூல் முகப்புப் படமாக வைத்து இருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரண்டு இஸ்லாமியர்களால் கொடூரமான முறையில் வெட்டிக் கொல்லப்பட்டார். இது சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பா.ஜ.க. எம்.பி. ராம் குமார் வர்மா செய்தியாளரிடம் கூறியதாவது: ஒவ்வொரு சம்பவத்துக்கு பிறகும் ராஜஸ்தான் அரசு சிறப்பு விசாரணை குழுவை எப்போதும் அமைக்கிறது. 

ஆனால் சிறப்பு விசாரணை குழு நடத்திய விசாரணை திருப்திகரமாக இல்லை. எனவே, ராஜஸ்தான் அரசில் கொஞ்சமாவது தார்மீகம் இருந்தால், இந்த அரசில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளதால், மாநில உள்துறை அமைச்சராக உள்ள முதல்வர் அசோக் கெலாட் பதவி விலக வேண்டும். அரசின் திருப்திப்படுத்தும் கொள்கையின் விளைவு உதய்பூர் சம்பவத்தில் தெரிகிறது. கெலாட் அரசு தூங்குகிறது. முதல்வர் இதை பற்றி சிந்திக்க வேண்டும். இந்த சம்பவத்தால் ஒட்டு மொத்த ராஜஸ்தான் மட்டுமல்ல, ஒட்டு மொத்த இந்தியாவும் வெட்கப்படுகிறது. மத்தியில் பா.ஜ.க. அரசு உணர்திறன் வாய்ந்தது. 

இந்த வழக்கில் தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு உத்தரவிடுமாறு பிரதமரும், உள்துறை அமைச்சரும் நிர்பந்திக்கப்பட்டனர். ராஜஸ்தான் அரசின்கீழ்  உள்ள அனைத்து புலனாய்வு அமைப்புகளும் சுதந்திரமாக செயல்பட முடியாது என்பதை நாங்கள் அறிவோம். எனவே மத்திய அரசு தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு உத்தரவிட்டது மிகவும் முக்கியமானது. பயங்கரவாதிகள் பிடிபடும் வகையில், தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு உத்தரவிட்டதற்கும், அதன் பின்னணியில் உள்ள ரகசியம் நோக்கம் அம்பலமாகியதற்கும் அரசுக்கு நன்றி. இவ்வாறு அவர் தெரிவித்தார்.