இதனால் அதிமுகவின் உள் விவகாரங்களில் தலையிட பாஜகவுக்கு உரிமை உள்ளது - வைத்திலிங்கம்
அதிமுகவின் உள் விவகாரங்களில் பாஜகவின் தலையீடு இருக்கிறது என்ற சலசலப்பு இருந்து வரும் நிலையில் அதிமுகவின் உள் விகாரங்களில் தலையிட பாஜகவுக்கு உரிமை உண்டு என்று தெரிவித்திருக்கிறார் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம்.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தால் ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி இருவரும் பிரிந்த பின்னர் இருவரின் பின்னாலும் ஆதரவாளர்கள் நின்று இரு அணியாக நிற்கின்றார்கள். இதில் எடப்பாடி பழனிச்சாமி, கட்சியின் பெரும்பான்மையான அதிகாரங்களை கைப்பற்றி இருக்கிறார். ஆனாலும் ஓபிஎஸ் அணி மீது தொடர்ந்து அவரும் அவரது ஆதரவாளர்களும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர் . பதிலுக்கு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் எடப்பாடி அணியினர் மீதான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.
அதிமுக கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் நத்தம் விஸ்வநாதனை அடிக்க பாய்ந்தார் வைத்திலிங்கம் என்று எடப்பாடி ஆதரவாளர் தங்கமணி சலசலப்பை ஏற்படுத்தியிருந்தார். இதை ஓபிஎஸ் ஆதரவாளர் ஜேசிடி பிரபாகர் மறுத்திருந்தார்.
இந்த நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் செய்தியாளர்களிடம் பேசியபோது , அதிமுகவின் விவகாரத்தில் பாஜகவின் தலையீடு குறித்த கேள்விக்கு, தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக கூட்டணியில் அங்கம் வைக்கிறது அதிமுக. அந்த அடிப்படையில் எங்கள் கட்சியின் உள் விவகாரங்களில் தலையிடுவதற்கு பாஜகவிற்கு அனைத்து உரிமையும் இருக்கிறது. கூட்டணியில் இருக்கிறோம் என்ற அடிப்படையில் தான் நாங்கள் பிரதமரையும், உள்துறை அமைச்சர் அமித்சாவையும் சந்தித்து வருகிறோம். அந்த அடிப்படையில் தான் ஓபிஎஸ் விரைவில் அவர்களை சந்திப்பார் என்று தெரிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான லஞ்ச ஒழிப்பு துறையின் சோதனையை ஓபிஎஸ் நியாயப்படுத்துவது குறித்த கேள்விக்கு, நாங்கள் திமுக அரசின் செயலை ஆதரிக்கவில்லை. அதே நேரம் ஆளுங்கட்சி எதிர்க்கட்சியினரை பழிவாங்கும் நடவடிக்கையுடன் செயல்படக்கூடாது. அப்படியே பல நடக்கும் பட்சத்தில் அதை துணிவுடன் தைரியமாக எதிர்த்து நின்று சட்டரீதியாக அணுக வேண்டும் என்று தான் ஓபிஎஸ் கருத்தை முன் வைத்தார். ஆனால் அதை எடப்பாடி தரப்பினர் திரித்து பிரச்சாரம் செய்கிறார்கள் என்றார்.