அதிமுகவைவிட 100 மடங்கு சிறந்த கட்சி பாஜக- பாஜக தலைவர்
நபிகள் நாயகம் பிறந்த மிலாடி நபியை முன்னிட்டு ஏழை,எளியோருக்கு பாஜக சிறுபான்மையினர் பிரிவு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினராக சிறுபான்மையினர் பிரிவு மாநிலத் தலைவர் டெய்ஸி தங்கையா கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், “நம் தலைவர் யார் வர வேண்டும் என்பதை நாம் தான் ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்க வேண்டும். தமிழகத்தில் கஞ்சா போன்ற போதை பொருட்கள் புழக்கம் தற்போதைய திமுக ஆட்சியில் அதிகமாகியுள்ளது.இதனால் கொலை சம்பவங்கள் தொடந்து நடைபெற்று வருகிறது.ஆனால் உத்திர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் பதவியேற்ற பிறகு அங்கு கொலைகள் குறைந்துள்ளது. அங்கு கொலை செய்பவர்களுக்கு உடனே என்கவுண்டர் உள்ளிட்ட தண்டனைகள் வழங்கப்படுகிறது.
அதிமுகவில் எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி போன்றோர் முதல்வராக இருந்துள்ளனர். ஆனால் திமுகவில் கலைஞர்,ஸ்டாலின், உதயநிதி என அவர்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான் பொறுப்புக்கு வர முடியும். அதிமுகவை விட 100 மடங்கு சிறந்த கட்சி பாஜக.இங்கு யார் வேண்டுமானாலும் முதல்வர் ஆகலாம். ஓட்டுக்கு 2000 ரூபாய் பணம் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள். ஆனால் வாங்கி விட்டு காசு கொடுக்காதவர்களுக்கு வாக்கு செலுத்துங்கள்” எனக் கூறினார்.
அ.தி.மு.க வின் கூட்டணி வைத்திருக்கும் பா.ஜ.க ஏற்கனவே நாங்கள் தான் உண்மையான எதிர்க்கட்சி என பேசி வருகிறார்கள். இந்த நிலையில் அ.தி.மு.க வை விட நூறு மடங்கு சிறந்த கட்சி பா.ஜ.க என பா.ஜ.க வின் மாநில நிர்வாகி பேசி இருப்பது அ.தி.மு.க வினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.