×

கவுகாத்தி மாநகராட்சி தேர்தலில் பா.ஜ.க. மகத்தான வெற்றி.. ஒரு வார்டில் கூட ஜெயிக்காத காங்கிரஸ் 

 

கவுகாத்தி மாநகராட்சி தேர்தலில் பெரும்பான்மையான வார்டுகளை கைப்பற்றி பா.ஜ.க. மகத்தான வெற்றி பெற்றுள்ளது. அதேசமயம் பாரம்பரிய கட்சியான காங்கிரஸ் ஒரு வார்டில் கூட வெற்றி பெறவில்லை.

அசாம் மாநிலம் கவுகாத்தி மாநகராட்சியில் 9 ஆண்டுகளுக்கு பிறகு மாநகராட்சி தேர்தல் கடந்த வெள்ளிக்கிழமையன்று நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு நேற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டது. ஆளும் கட்சியான பா.ஜ.க.வும் அதன் கூட்டணி கட்சியும் கவுகாத்தி மாநகராட்சி தேர்தலில் பெரும்பான்மையான வார்டுகளை கைப்பற்றின. மொத்தமுள்ள 60 வார்டுகளில் 58ல் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்றது. காங்கிரஸ் ஒரு வார்டில் கூட வெற்றி பெறவில்லை. கவுகாத்தி மாநகராட்சி தேர்தலில் பா.ஜ.க.வின் மகத்தான வெற்றிக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி டிவிட்டரில், நன்றி கவுகாத்தி, இந்த அழகான நகரத்தின் மக்கள் வளர்ச்சியின் செயல் திட்டத்தை உருவாக்க அசாம் பா.ஜ.க.வுக்கு ஒரு அற்புதமான ஆணையை வழங்கியுள்ளனர். அவர்கள் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவின் கீழ் மாநில அரசாங்கத்தின் கடின உழைப்பையும் ஆசிர்வதித்துள்ளனர். கடின உழைப்புக்காக ஒவ்வொரு பா.ஜ.க. தொண்டர்களுக்கும் எனது நன்றிகள் என பதிவு செய்துள்ளார்.

அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா டிவிட்டரில், கவுகாத்தி மாநகராட்சி தேர்தலில் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு வரலாற்று வெற்றியை அளித்த கவுகாத்தி மக்களுக்கு நான் தலை வணங்குகிறேன். இந்த மகத்தான ஆணையின் மூலம், பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் கீழ் நமது வளர்ச்சி பயணத்தில் மக்கள் தங்கள் நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர். என பதிவு செய்துள்ளார்.