×

ஸ்டாலினை விமர்சனம் செய்துவிட்டு வெட்கமில்லாமல்... துரை வைகோவுக்கு பாஜக பதிலடி

 

 ராஜபக்சே குடும்பத்திற்கு ஏற்பட்ட நிலைதான் மோடிக்கும்,  பாஜகவினருக்கு ஏற்படும் என்று துரை வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளதற்கு பாஜக பதிலடி கொடுத்திருக்கிறது.

 பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை எதிர்த்து மத்திய அரசை கண்டித்து மதிமுக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.   மதிமுகவின் தலைமை கழக செயலாளர் துரை வைகோ இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசினார். 

 அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த துரை வைகோ,   ’’ராஜபக்சே அரசின் தவறான பொருளாதார கொள்கையினால்,  தவறான ஆட்சி முறையினால் இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.   அந்நாட்டு மக்கள்  ஒரு சாவு ஒரு வேளை சாப்பாடு கூட இல்லாமல்,  கடும் மின்வெட்டாலும் அவதிப்பட்டு வருகின்றனர்.   அதே போன்ற மக்கள் விரோத ஆட்சியை மத்திய அரசும் கடைபிடித்தால் இலங்கை நிலைதான் இந்தியாவிலும் ஏற்படும்’’ என்று எச்சரித்தார்.

மேலும்,  ‘’இலங்கையில் ராஜபக்சே குடும்பத்தின் வீடுகளுக்கு முன்பாக மக்கள் முற்றுகை போராட்டம் நடத்த  முயலுகின்றனர்.  உயிருக்கு பயந்து எந்த நேரத்திலும் ராஜபக்சே குடும்பத்தினர் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்லக் கூடிய சூழல் உள்ளது.   ராஜபக்சே குடும்பத்திற்கு என்ன நிலை ஏற்பட்டதோ அதே நிலைதான் மோடிக்கும்,  மோடி அரசுக்கும் பாஜக தலைவர்களுக்கும் ஏற்படும்’’ என்று எச்சரித்தார்.
 
இதற்கு தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி,   ‘’தமிழினத்தை கொன்று குவித்த திமுக என்று கூறிவிட்டு ஒரு எம்.பி. பதவிக்காக அதே திமு கவிடம் கட்சியை அடகு வைத்த கேவல அரசியலுக்கு சொந்தக்காரர்கள், வாரிசு அரசியல்' என்று ஸ்டாலினை விமர்சனம் செய்து விட்டு, அதே வாரிசு அரசியலை தங்கள் கட்சியில் வெட்கமில்லாமல் அரங்கேற்றிக் கொண்டிருப்பவர்கள், பாஜக குறித்தும், மோடி குறித்தும் பேசுவதற்கு அறுகதையற்ற தமிழின துரோகிகள்’’என்று பதிலடி கொடுத்துள்ளார்.