மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறை குறித்து கண்காட்சி நடத்த அனுமதி மறுப்பு.. மம்தாவை தாக்கிய பா.ஜ.க.
மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறை குறித்து கண்காட்சி நடத்த கொல்கத்தா போலீஸ் அனுமதி கொடுக்க மறுத்ததையடுத்து, மம்தா பானர்ஜியை பா.ஜ.க. கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.
2021 மே 2ம் தேதியன்று மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியானது. அந்த தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, அம்மாநிலத்தின் பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தன. இந்த சம்பவங்களுக்கு திரிணாமுல் காங்கிரஸார் தான் காரணம் பா.ஜ.க. குற்றம் சாட்டியது.
இந்நிலையில் மேற்கு வங்க மாநில தேர்தலுக்கு பிந்தைய வன்முறை குறித்து கண்காட்சி நடத்த கொல்கத்தா போலீசிடம் பா.ஜ.க. அனுமதி கோரியது. ஆனால் கொல்கத்தா போலீஸ் அனுமதி கொடுக்க மறுத்து விட்டது. இதனை பா.ஜ.க. கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. மேலும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை பா.ஜ.க. தாக்கியுள்ளது. பா.ஜ.க.வின் ஐ.டி.பிரிவு தலைவர் அமித் மால்வியா டிவிட்டரில், மம்தா பானர்ஜி கண்காணிப்பில் தேர்தலுக்கு பிந்தைய கொடூரமான வன்முறை குறித்த கண்காட்சியை நடத்துவதற்கு பா.ஜ.க. கொல்கத்தா காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. அவர் எதற்கு பயப்படுகிறார்?
ரத்தம் கசியும் தரையில் நிற்க அவள் பயப்படுகிறாளா அல்லது திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களால் கற்பழிக்கப்படும் துரதிஷ்டமான பெண்களின் அழுகை காது கேளாததாக இருக்கிறதா? என பதிவு செய்து இருந்தார். அதேவேளையில், கொல்கத்தாவில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறையின் ஒரு ஆண்டை குறிக்கும் வகையில் பா.ஜ.க.வினர் கொல்கத்தாவில் சுவரொட்டிகள் மற்றும் பேனர்கள் வைத்துள்ளனர். அந்த சுவரொட்டிகள் மற்றும் பேனர்களில், தேர்தலுக்கு பிந்தைய வன்முறையின் ஒராண்டு நிறைவு. வன்முறை இல்லாத அரசியல் மற்றும் அச்சமற்ற வங்காளத்தை உருவாக்கும் வரை பா.ஜ.க. போராடும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.