×

தேசிய சின்னம் திறப்புக்கு சட்டப்பூர்வ பதவியில் இருப்பவர்களுக்கு மட்டுமே அழைப்பு.. காங்கிரஸூக்கு பதிலடி கொடுத்த பா.ஜ.க.

 

தேசிய சின்னம் திறப்பு விழா நிகழ்ச்சிக்கு சட்டப்பூர்வ பதவியில் இருப்பவர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டது என காங்கிரஸ் கட்சிக்கு பா.ஜ.க. பதிலடி கொடுத்துள்ளது.

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் மேல் தேசிய சின்னத்தை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். இந்த தேசிய சின்ன சிலை திறப்பு விழாவுக்கு எதிர்க்கட்சிகளை அழைக்காததற்கு எதிர்க்கட்சியான காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதற்கு பா.ஜ.க.பதிலடி கொடுத்துள்ளது. பா.ஜ.க.வின் செய்தி தொடர்பாளர் சுதன்ஷு திரிவேதி கூறியதாவது: பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு வளர்ச்சிக்கு வழி வகுத்து வருகிறது. 

ஆனால் வேலையை தொந்தரவு செய்ய வாய்ப்பு கிடைக்கும் வரை சிரமப்படுகிற சிலர் இந்த நாட்டில் இருக்கிறார்கள். காங்கிரஸூம் அதே குழப்பமான அணுகுமுறையை கொண்ட கட்சி. ஊழல், வம்ச அரசியல் மற்றும் திருப்திப்படுத்துதல் என்று கொடி கட்டி பறக்கும் காங்கிரஸ் கட்சி, மதச்சார்பற்ற கட்சிகள் என்று அழைக்கப்படுபவற்றின் தலைவராகவும் உள்ளது, ஏதாவது ஒரு வகையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைக்க முயற்சிக்கிறது. 

இந்த நிகழ்ச்சிக்கு (தேசிய சின்னம் திறப்பு) சட்டப்பூர்வ பதவியில் இருப்பவர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டது. காங்கிரஸின் தற்போதைய மற்றும் முன்னாள் தலைவர்கள் ஊழல் குற்றச்சாட்டில் இன்று ஜாமீனில் உள்ளனர். இந்த சூழல் காங்கிரஸூக்கு நாட்டை பற்றி ஏதாவது பேசுவதற்கு எந்த விதமான தார்மீக களத்தை தருகிறதா?. இவ்வாறு அவர் தெரிவித்தார்.