×

ராகுலின் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்துக்கு ராமர் கோயில் அறக்கட்டளை தலைவர்கள் ஆதரவு.. பா.ஜ.க. அதிருப்தி

 

ராகுல் காந்தியின் நடைப்பயணத்துக்கு  ராமர் கோயில் அறக்கட்டளை தலைவர்கள் ஆதரவு தெரிவித்து இருப்பது பா.ஜ.க.வினருக்கு அதிருப்தியை  ஏற்படுத்தியுள்ளது  என்று கூறப்படுகிறது.

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் தற்போது உத்தர பிரதேசத்தில் நடந்து வருகிறது. ராமர் கோயில் அறக்கட்டளையின் தலைவர்கள் ராகுல் காந்தியை பாராட்டினர். ராமர் கோயில் அறக்கட்டளையின் செயலாளர் சம்பத் ராய் கூறுகையில், நாட்டில் கால் நடையாக நடந்து வரும் இளைஞனுக்கு நன்றி. அவரது நடவடிக்கையை நான் பாராட்டுகிறேன். அதில் தவறேதும் இல்லை. நான் ஆர்.எஸ்.எஸ். தொண்டன், ஆர்.எஸ்.எஸ். ஒருபோதும் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை கண்டித்ததில்லை. என தெரிவித்தார். 

ராமர் கோயில் அறக்கட்டளையின் மற்றொரு மூத்த அறங்காவலரான கோவிந்த் கிரி கூறுகையில், நாட்டின் ஒற்றுமை, வலிமை, நல்லிணக்கத்துக்காக  நடைப்பயணம் மேற்கொள்ளும் ராகுலை கடவுள் ராமர் ஆசிர்வதிக்க பிரார்த்திக்கிறேன். இந்திய ஒற்றுமையை வலியுறுத்துவது சிறந்த முழக்கம் என்று தெரிவித்தார்.  ராகுல் காந்தியின் நடைப்பயணத்துக்கு  ராமர் கோயில் அறக்கட்டளை தலைவர்கள் ஆதரவு தெரிவித்து இருப்பது பா.ஜ.க.வினருக்கு அதிருப்தியை  ஏற்படுத்தியுள்ளது  என்று கூறப்படுகிறது.

ராமர் கோயில் அறங்காவலர்கள் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை ஆதரித்ததையடுத்து, காங்கிரஸ் கட்சியின் ஊடக பொறுப்பாளர் ஜெய்ராம் ரமேஷ் டிவிட்டரில், யோகியின் மாநிலத்தில் பருவநிலை மாற்றத்திற்கான அறிகுறிகள்?. இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை வரவேற்று அயோத்தி ராமர் கோயிலின் தலைமை அர்ச்சகரின் கடிதம் மற்றும் சம்பத் ராய் போன்ற வி.எச்.பி. தலைவர்கள் ராகுல் காந்திக்கு பாராட்டு தெரிவித்ததையடுத்து, இன்று பாக்பத்தின் பாரௌலியில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்தில் இருந்து உற்சாகமாக கை அசைத்து யாத்திரிகள் (நடைப்பயணத்தில் வருபவர்கள்) வரவேற்கப்பட்டனர் என பதிவு செய்து இருந்தார்.