×

மத வழிபாட்டு தலங்களில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்த நீதிமன்றம் தடை விதித்தது.. கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை

 

மத வழிபாட்டு தலங்களில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்த உயர் நீதிமன்றம் தடை  விதித்தது என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.

மத வழிபாட்டு தலங்களில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்த கடந்த ஆண்டு உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இருப்பினும் பல இடங்களில் ஒலி பெருக்கிகள் பயன்படுத்தப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பாக கர்நாடக மாநில அரசும் பெரிய அளவில் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் மகாராஷ்டிராவில், மசூதிகளில் ஒலிபெருக்கிகளை தடை செய்ய வேண்டும் இல்லையென்றால் மசூதிகளின் முன் ஹனுமன் பாடல்களை இசைப்போம் என்று அம்மாநில அரசுக்கு எம்.என்.எஸ். கட்சியின் தலைவர் ராஜ்தாக்கரே எச்சரிக்கை விடுத்தார்.

இதனால், ஒலி பெருக்கிகள் விவகாரம் நாடு முழுவதும் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒலி பெருக்கிகள் விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை செய்தியாளர்களிடம் கூறியதாவது: இது உயர் நீதிமன்ற உத்தரவு. இது கட்டாயப்படுத்தப்படவில்லை. மக்களிடம் பேசி மற்றும் விளக்கி எல்லாவற்றையும் செய்ய வேண்டும். இது ஆசானுக்கு மட்டுமல்ல, எல்லா ஒலி பெருக்கிகளுக்கும் பொருந்தும். எனவே நாங்கள் முடிவு எடுப்போம். கடந்த ஆண்டு மத வழிபாட்டுத் தலங்களில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்த உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ராஜ் தாக்கரே கருத்து குறித்து கர்நாடக அமைச்சர் கே.எஸ். ஈஸ்வரப்பா கூறுகையில், மசூதிகளில் ஒலிபெருக்கிகளை பயன்படுத்துவதற்கு எதிராக ராஜ் தாக்கரே அல்லது ஸ்ரீராம சேனை முயற்சிப்பது இயற்கையாகவே இருக்க வேண்டும். ஒலி பெருக்கிகளால் காலை மற்றும் மாலை நேரங்களில் மாணவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு இடையூறு ஏற்படுவதாக நீண்ட நாட்களாக புகார்கள் உள்ளன என்று தெரிவித்தார்.