×

இமாச்சல பிரதேசத்தில் பணவீக்கத்தையும்  வேலையின்மையையும் பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ளது... பூபேஷ் பாகல் குற்றச்சாட்டு

 

இமாச்சல பிரதேசத்தில் பணவீக்கத்தையும்  வேலையின்மையையும் பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ளது என்று சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் குற்றம் சாட்டினார்.

இமாச்சல பிரதேசத்தில் 68 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாளை (12ம் தேதி) நடைபெற உள்ளது. இமாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரத்திற்கான கடைசி நாளான நேற்று பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரம் செய்தன. காங்கிரஸ் கட்சி 68 சட்டப்பேரவை தொகுதிகளிலும் விஜய் ஆசிர்வாத் கூட்டங்களை நடத்தியது.

இமாச்சல பிரதேசம் சடவுனில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் பேசுகையில் கூறியதாவது: இமாச்சல பிரதேசத்தில் பணவீக்கத்தையும்  வேலையின்மையையும் பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ளது. மாற்றத்திற்கான நேரம் இது. மாநிலத்தில் ஆட்சிக்கு வந்தால் 10 நாட்களில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வருவோம், 1 லட்சம் பேருக்கு வேலை வழங்குவதாக காங்கிரஸ் உறுதியளித்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

காங்கிரஸ் இமாச்சல பிரதேச தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில், மாநிலத்தில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் வீடுகளுக்கு 300 யூனிட் வரை மின்சாரம் இலவசம், இளைஞர்களுக்கு 5 லட்சம் வேலை வழங்கப்படும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம், ஒவ்வொரு தொகுதியிலும் 4 ஆங்கில வழி பள்ளிக்கூடங்கள், மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு பெண்களுக்கும் நிதியுதவியாக ரூ.1,500 வழங்குவோம், ஸ்டார்ட்அப் நிதியாக ரூ.10 கோடி, பசு சாணத்தை கிலோ ரூ.2க்கு கொள்முதல் செய்வோம் என்பது உள்பட பல கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை  அளித்துள்ளது.