×

பிளவுப்படுத்தும் கட்சி இன்னும் டி-சர்ட் மற்றும் காக்கி டவுசடரில் தொங்கிக் கொண்டிருக்கிறது.. பா.ஜ.க.வை தாக்கிய பூபேஷ் பாகல்

 

ஒரு கட்சி நாட்டை ஒன்றிணைக்கும் போது, பிளவுப்படுத்தும் கட்சி இன்னும் டி-சர்ட் மற்றும் காக்கி டவுசடரில் தொங்கிக் கொண்டிருக்கிறது என்று சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் தெரிவித்தார்.

பா.ஜ.க.வின் டிவிட்டர் பக்கத்தில், பாரதம் பார்த்துக் கொண்டிருக்கிறது என்ற தலைப்பில் ஒரு படம் பதிவேற்றம் செய்து இருந்தது. அதில் ராகுல் காந்தி வெள்ளை நிற டி-சர்ட் அணிந்து யாத்திரையில் பங்கேற்ற படமும், பர் பெர்ரி பிராண்ட் டி-சர்ட் படமும் அதன் கீழ் அதன் விலை ரூ.41,257 என குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது ராகுல் காந்தி ரூ.41 ஆயிரம் டி-சர்ட் அணிந்து யாத்திரை பங்கேற்கிறார் என்று பா.ஜ.க. விமர்சனம் செய்துள்ளது.

பா.ஜ.க.வின் விமர்சனத்துக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், சத்தீஸ்கர் முதல்வருமான பூபேஷ் பாகல் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக பூபேஷ் பாகல் கூறுகையில், அப்படித்தான் தோணுது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான மிகப்பெரிய இந்திய ஒற்றுமை பாதயாத்திரைக்கு எதிராக மத்திய அரசிடம் டி-சர்ட் மட்டுமே உள்ளது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில், ஒரு கட்சி நாட்டை ஒன்றிணைக்கும் போது, பிளவுப்படுத்தும் கட்சி இன்னும் டி-சர்ட் மற்றும் காக்கி டவுசடரில் தொங்கிக் கொண்டிருக்கிறது என தெரிவித்தார்.

காங்கிரஸ் டிவிட்டரில், இந்திய ஒற்றுமை யாத்திரையில் திரண்டிருந்த கூட்டத்தை பார்த்து பயப்படுகிறீர்களா?. உண்மையான பிரச்சினையை பற்றி பேசுங்கள். வேலையில்லா திண்டாட்டம் மற்றும் பணவீக்கம் பற்றி பேசுங்கள். இதர ஆடைகளை பற்றி விவாதிக்க வேண்டும் என்றால், மோடி ஜியின் ரூ.10 லட்சம் மதிப்புள்ள உடை, ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள கண்ணாடிகள் குறித்து விவாதிக்கப்படும் என பதிவு செய்துள்ளது.