×

பா.ஜ.க. தலைவர்கள் வீடுகளை சேதப்படுத்திய அக்னிபாத் எதிர்பாளர்கள்.. பீகாரில் ஆளும் கூட்டணிக்குள் விரிசல்
 

 

அக்னிபாத் திட்டத்துக்கு எதிரான போராட்டக்காரர்கள், அம்மாநில பா.ஜ.க. தலைவர், பீகார் துணை முதல்வர் வீடுகள் மற்றும் பல பா.ஜ.க. அலுவலகங்களையும் போராட்டக்காரர்கள் சேதப்படுத்தினர். இந்த சம்பவம் ஆளும் பா.ஜ.க.-ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.

ராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு திட்டமான அக்னிபாத் திட்டத்துக்கு இளைஞர்கள் ஒரு பகுதியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நாட்டின் பல மாநிலங்களில் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் போராட்டத்தில் வருகின்றனர். இந்நிலையில் பீகாரில், அம்மாநில பா.ஜ.க. தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால் வீட்டை அக்னிபாத் திட்டத்துக்கு எதிரான போராட்டக்காரர்கள் சேதப்படுத்தினர். மேலும் பீகார் துணை முதல்வர் ரேணு தேவி வீடு மற்றும் பல பா.ஜ.க. அலுவலகங்களையும் போராட்டக்காரர்கள் சேதப்படுத்தினர்.

இது  தொடர்பாக சஞ்சய் ஜெய்ஸ்வால் கூறுகையில், நாங்கள் ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கிறோம். ஆனால் இதுபோன்ற சம்பவம் நாட்டில் எங்கும் நடக்கவில்லை. பீகாரில் மட்டும்தான் நடக்கிறது. பா.ஜ.க.வின் தலைவர் என்ற முறையில், இந்த சம்பவத்தை நான் கண்டிக்கிறேன். இதை தடுக்கவில்லை என்றால், இது யாருக்கும் நல்லதல்ல என மறைமுகமாக முதல்வர் நிதிஷ் குமாருக்கு எச்சரிக்கை செய்து இருந்தார். சஞ்சய் ஜெய்ஸ்வால் கருத்து குறித்து பா.ஜ.க.வின் கூட்டணி கட்சியான  ஐக்கிய ஜனதா தளத்தின் தேசிய தலைவர் ராஜீவ் ரஞ்சன் என்கிற லாலன் சிங் பதிலடி கொடுத்துள்ளார். 

ராஜீவ் ரஞ்சன் இது தொடர்பாக கூறியதாவது: மத்திய அரசு ஒரு முடிவை எடுத்துள்ளது. மற்ற மாநிலங்களிலும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இளைஞர்கள் தங்கள் எதிர்காலத்தை பற்றி கவலைப்படுகிறார்கள். எனவே அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க முன்வந்தனர். நிச்சயமாக வன்முறை அல்ல. வன்முறையை ஏற்க முடியாது. ஆனால் இந்த இளைஞர்களை கவலையடைய செய்வதையும், அவர்களது கவலைகளையும் பா.ஜ.க. கேட்க வேண்டும். மாறாக நிர்வாகத்தின் மீது பா.ஜ.க. குற்றம் சாட்டுகிறது. இந்த திட்டத்துக்கு எதிராக பா.ஜ.க. ஆளும் மாநிலங்களிலும் போராட்டங்கள் நடக்கின்றன. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் பாதுகாப்பு படையினரின் செயலற்ற தன்மை குறித்து ஜெய்ஸ்வால் ஏன் பேசவில்லை?. இவ்வாறு அவர் தெரிவித்தார்.