புதிய இந்தியாவின் புதிய தந்தை நாட்டுக்கு என்ன செய்தார்?.. பா.ஜ.க.வை தாக்கிய நிதிஷ் குமார்..
பிரதமர் மோடியை புதிய இந்தியாவின் புதிய தந்தை என்று பா.ஜ.க.வினர் கூறியதை குறிப்பிட்டு, புதிய இந்தியாவின் புதிய தந்தை தேசத்துக்கு என்ன செய்தார் என்று அந்த கட்சியை பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தாக்கினார்.
மகாராஷ்டிராவின் துணை முதல்வரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவருமான தேவேந்திர பட்னாவிஸின் மனைவி அம்ருதா பட்னாவிஸ் கடந்த மாதம் நிகழ்ச்சி ஒன்றில், இந்தியாவுக்கு இரண்டு தேச தந்தைகள் உள்ளனர். ஒன்று முந்தைய இந்தியாவை சேர்ந்தது, மற்றொன்று புதிய இந்தியாவுக்கானது. மகாத்மா காந்தி இந்தியாவின் தேச தந்தை, நரேந்திர மோடி புதிய இந்தியாவின் தேச சந்தை என்றும் நான் நம்புகிறேன் என தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடியை புதிய இந்தியாவின் தந்தை என்று அம்ருதா பட்னாவிஸ் கூறியதை பல்வேறு கட்சியினர் விமர்சனம் செய்தனர். தற்போது பீகார் முதல்வர் நிதிஷ் குமாரும் அதனை விமர்சனம் செய்துள்ளார். பா.ஜ.க.வின் முன்னாள் கூட்டாளியும், பீகார் முதல்வருமான நிதிஷ் குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், சுதந்திர போராட்டத்திற்கும் அவர்களுக்கும் (ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.) எந்த சம்பந்தமும் இல்லை. சுதந்திர போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். பங்களிக்கவில்லை. தேசத்தின் புதிய தந்தை என்ற கருத்தை பற்றி படித்தோம். புதிய இந்தியாவின் புதிய தந்தை நாட்டுக்கு என்ன செய்தார்? என தெரிவித்தார்.
மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா படோல் கூறுகையில், தேச தந்தையை யாருடனும் ஒப்பிட முடியாது. அவர்களின் (பா.ஜ.க.) புதிய இந்தியா என்பது ஒரு சில நண்பர்களை பெரும் பணக்காரர்களாக ஆக்குவது மட்டுமே, மற்ற மக்கள் தாழ்த்தப்பட்டவர்களாகவும் பசியுடனும் இருக்கிறார்கள். நமக்கு இந்த புதிய இந்தியா தேவையில்லை என்று தெரிவித்தார்.