×

ஊழலுக்கும், சட்டவிரோதத்துக்கும் வழிவகுத்தது காங்கிரஸ் என்பது நாடு முழுவதும் தெரியும்...  பசவராஜ் பொம்மை பதிலடி
 

 

ஊழலுக்கும், சட்டவிரோதத்துக்கும் வழிவகுத்தது காங்கிரஸ் என்பது நாடு முழுவதும் தெரியும் என்று பா.ஜ.க. எம்.எல்.ஏ. மீது புகார் கொடுத்த காங்கிரஸ் கட்சிக்கு முதல்வர் பசவராஜ் பொம்மை பதிலடி கொடுத்துள்ளார்.

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் கோகாக் தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. ரமேஷ் ஜார்கிஹோலி. கடந்த சில தினங்களுக்கு முன் முன்னாள் அமைச்சரான ரமேஷ் ஜார்கோலி பொதுக்கூட்டம் ஒன்றில் பேசுகையில், எதிர்வரும் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க. ஒரு ஓட்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் என்று கூறியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து வாக்காளர்களை கவரும் வகையில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக ரமேஷ் ஜார்கிஹோலி மீது ஹைகிரவுண்ட் காவல் நிலையத்தில் காங்கிரஸ் தலைவர்கள் புகார் அளித்தனர்.

ரமேஷ் ஜார்கோலி மீது காங்கிரஸ் புகார் அளித்தற்கு கர்நாடக முதல்வரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவருமான பசவராஜ் பொம்மை பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியதாவது: ஊழலுக்கும் சட்டவிரோதத்துக்கும் வழிவகுத்தது காங்கிரஸ் என்பது நாடு முழுவதும் தெரியும். ஒவ்வொரு இல்லத்தரசிக்கும் ரூ.2 ஆயிரம், வீடுகளுக்கு மாதந்தோறும் 200 யூனிட் இலவச மின்சாரம் என்று காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்துள்ளது. அவர்கள் (காங்கிரஸ்) ஒவ்வொரு நாளும் புதிய வாக்குறுதிகளை அறிவிக்கிறார்கள்.

அவர்களின் வாக்குறுதிக்கும் அதே அளவுகோலை (வாக்காளர்களை கவர சட்டவிரோத செயல்) பயன்படுத்தினால், காங்கிரஸ் தலைவர்கள் குற்றவாளிகள் இல்லையா? வாக்காளர்களை கவருவதற்காக அவர்கள் புதிய வாக்குறதிகளை அளிக்கவில்லையா? அவர்களுக்கு எதிராக இதுபோன்ற நூற்றுக்கணக்கான புகார்களை நாங்கள் பதிவு செய்யலாம். ஆனால் இறுதியில் மக்கள் முடிவு செய்வார்கள். மக்களும் அவர்களை நன்கு அறிந்து முடிவெடுப்பார்கள். அவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியதில்லை. அவர்கள் விரும்பியதை செய்ய அவர்கள் சுதந்திரமாக உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.