×

பா.ஜ.க.,ஆர்.எஸ்.எஸ். செயல் திட்டங்களை பல்கலைக்கழகங்களில் செயல்படுத்த கவர்னர் முயற்சி.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தாக்கு
 

 

9 துணைவேந்தர்களை பதவி விலக கேரள கவர்னர் உத்தரவிட்டதை குறிப்பிட்டு, பா.ஜ.க.,ஆர்.எஸ்.எஸ். செயல் திட்டங்களை பல்கலைக்கழகங்களில் செயல்படுத்த கவர்னர் முயற்சி செய்கிறார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக தாக்கியுள்ளது.

கேரளாவில் கவர்னர் ஆரிப் முகமது கானுக்கும், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி அரசுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் கருத்து மோதல் நிலவி வருகிறது. தற்போது, பல்கலைக்கழங்களின் 9 துணைவேந்தர்களை ராஜினாமா செய்யும்படி கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் உத்தரவிட்டது, புதிய பினராயி விஜயன் அரசுக்கும், கவர்னர் ஆரிப் முகமது கானும் இடையே புதிய மோதல் களமாக மாறியுள்ளது. 

9 துணைவேந்தர்களை ராஜினாமா செய்யும்படி கவர்னர் உத்தரவிட்ட விவகாரம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் எம்.வி. கோவிந்தன் மாஸ்டர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த ஒரு வாரமாக கேரள கவர்னரின் முடிவுகள் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்.) மற்றும் பா.ஜ.க.வுக்கு சாதகமாக உள்ளன. அவர் (கவர்னர்) அவர்களின் (பா.ஜ.க.,ஆர்.எஸ்.எஸ்.) செயல் திட்டங்களை பல்கலைக்கழகங்களில் செயல்படுத்த முயற்சிக்கிறார். ஒரு துணைவேந்தராக கவர்னர் எடுக்கும் முடிவுகள் அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டவை அல்ல. 

கவர்னர் எடுக்கும் அனைத்து தவறான முடிவுகளும் சட்டரீதியான சவால்களை சந்திக்க நேரிடும். கேரள நிதியமைச்சர் மீதான கவர்னர் கடிதத்திற்கு முதல்வர் பதில் அளித்துள்ளார். மலையாள ஊடகங்கள் மற்றும் சில செய்தி சேனல்களை கவர்னர் கட்டுப்படுத்தினார். ஆனால் அவரது செய்தியாளர் சந்திப்புக்கு ஒரு ஊடகம் சென்றது, இது பாசிச அணுகுமுறையை ஏற்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.