எதிர்க்கட்சிகளை ஒடுக்க ஆளும்கட்சி அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது... பா.ஜ.க.வை தாக்கிய பாகல்
எதிர்க்கட்சிகளை ஒடுக்க ஆளும்கட்சி அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது என மத்திய பா.ஜ.க. அரசை சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் குற்றம் சாட்டினார்.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக அமலாக்க இயக்குனரகம் நடத்திய விசாரணைக்கு எதிராக தலைவர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்களான கே.சி.வேணுகோபால்,ஆஹிர் ரஞ்சன் சவுத்ரி, தீபேந்தர் ஹூடா, ரஞ்சிதா ரஞ்சன், ஜோதி மணி உள்ளிட்ட தலைவர்களை பல மணி நேரம் பதர்பூர் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டனர்.
சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு எதிராக அமலாக்கத்துறை, வருமான வரித்துறை அல்லது சி.பி.ஐ. பயன்படுத்தி அவர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். எதிர்க்கட்சிகள் ஒரே மேடையில் ஒன்றிணைவதை கருத்தில் கொள்ள வேண்டிய நேரம் வந்து விட்டது.
நான் பதர்பூர் காவல் நிலையத்துக்கு சென்று கொண்டிருந்தேன், ஆனால் போலீசார் என்னை அங்கு செல்ல விடாமல் தடுத்தனர். எதிர்க்கட்சிகளை ஒடுக்க ஆளும்கட்சி அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. அவர்கள் (பா.ஜ.க.) காங்கிரஸ் இல்லாத பாரதம் என்று தொடர்ந்து கூறுகிறார்கள். ஆனால் அவர்களால் இதை அடைய முடியவில்லை. அதனால்தான் அவர்கள் அமலாக்கத்துறை போன்ற ஏஜென்சிகளை பயன்படுத்துகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.