ராஜஸ்தானில் பதவியை ராஜினாமா செய்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.... முதல்வர் அசோக் கெலாட் அரசுக்கு பின்னடைவு..
எனது சமூகத்தின் உரிமைகளை பாதுகாக்க தவறினால், பதவியில் நீடிக்க எங்களுக்கு உரிமை இல்லை, எனது மனதின் குரலை கேட்டு நான் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எழுதிய ராஜினாமா கடிதத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பனா சந்த் மேக்வால் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் பரண்-அத்ரு சட்டப்பேரவை தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் காங்கிரஸின் பனா சந்த் மேக்வால். இவர் எம்.எல்.ஏ. பதவியிலிருந்து விலகுவதாக அம்மாநில முதல்வர் அசோக் கெலாட்டுக்கு ராஜினாமா கடிதம் அனுப்பியுள்ளார். பனா சந்த் மேக்வால் தனது ராஜினாமா கடிதத்தில், எங்கள் சமூகத்தின் உரிமைகளை பாதுகாக்க தவறினால், பதவியில் நீடிக்க எங்களுக்கு உரிமை இல்லை. எனது மனதின் குரலை கேட்டு நான் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்கிறேன். அதனால் நான் எந்த பதவியும் இல்லாமல் சமூகத்திற்கு சேவை செய்ய முடியும் என அதில் தெரிவித்துள்ளார்.
எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தது தொடர்பாக பனா சந்த் மேக்வால் கூறியதாவது: நாடு சுதந்திரம் அடைந்து 75வது ஆண்டு விழாவை கொண்டாடினாலும், தலித்துகள் மற்றும் பிற தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மீதான வன்கொடுமைகள் தொடர்கின்றன. என் சமூகம் மீது நடத்தப்படும் அட்டூழியங்களை பார்த்து நான் வேதனைப்படுகிறேன். என் சமூகம் சித்திரவதை செய்யப்படுவதை வார்த்தைகளில் வெளிப்படுத்த முடியாது.
பாத்திரத்தில் இருந்து தண்ணீர் குடித்தற்காகவோ அல்லது மீசையை வளர்த்தற்காகவோ அல்லது திருமணத்தின் போது குதிரையில் சவாரி செய்ததற்காகவோ தலித்துக்கள் கொல்லப்படுகிறார்கள். நீதித்துறை செயல்முறை ஸ்தம்பித்துள்ளது மற்றும் வழக்கு கோப்புகள் ஒரு மேசையிலிருந்து மற்றொன்றுக்கு அனுப்பப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளாக தலித்துக்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்குகள் அதிகரித்து வருகின்றன. அரசியலமைப்பு சட்டம் அளித்துள்ள தலித்துக்களின் உரிமைகளை பாதுகாக்க யாரும் இல்லை என்று தெரிகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். ஆளும் கட்சி எம்.எல்.ஏ. ஒருவரே மாநிலத்தில் தலித் சமூகம் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது என்று குறிப்பிட்டு, பதவியை ராஜினாமா செய்து இருப்பது அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.