×

திரௌபதி முர்மு மிகவும் தீய தத்துவத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.. சர்ச்சையை கிளப்பிய காங்கிரஸின் அஜோய் குமார்

 

திரௌபதி முர்மு மிகவும் தீய தத்துவத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறார் என்று காங்கிரஸின் அஜோய் குமார் பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை 24ம் தேதி முடிவடைகிறது. இதனையடுத்து வரும் ஜூலை 18ம் தேதியன்று குடியரசு தலைவர் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது. குடியரசு தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறார். பா.ஜ.க. கூட்டணி வேட்பாளராக திரௌபதி முர்மு களத்தில் உள்ளார். இந்நிலையில், திரௌபதி முர்மு மிகவும் தீய தத்துவத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறார் என்று காங்கிரஸின் மூத்த தலைவர் ஒருவர் பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவரான அஜோய் குமார் கூறியதாவது: யஷ்வந்த் சின்ஹா (குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர்) ஒரு நல்ல வேட்பாளர். திரௌபதி முர்மு ஒரு கண்ணியமான நபர், ஆனால் அவர் இந்தியாவின் தீய தத்துவத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். பழங்குடியினரின் அடையாளமாக அவளை ஆக்கிவிடக் கூடாது. ராம் நாத் கோவிந்த் குடியரசு தலைவர் ஆனால் எஸ்.சி.களுக்கு எதிரான கொடுமைகள் நடக்கின்றன. 

மோடி அரசு மக்களை முட்டாளாக்குகிறது. கடந்த சில ஆண்டுகளாக பட்டியல் சாதியினர் நிலை மோசமாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். வரும் 18ம் தேதி நடைபெறவுள்ள குடியரசு தலைவர் தேர்தலில் திரௌபதி முர்மு வெற்றி பெற்றால், அவர் நாட்டின் முதல் பழங்குடியின குடியரசு தலைவர் என்ற பெருமையை பெறுவார். மேலும், இந்தியாவின் 2வது பெண் குடியரசு தலைவர் என்ற சிறப்பும் அவரை சாரும்.