×

பா.ஜ.க. ஆதரவு வேட்பாளருக்கு வாக்களித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ... கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும் நீ்க்கிய காங்கிரஸ்

 

ஹரியானா மாநிலங்களவை தேர்தலில் பா.ஜ.க. ஆதரவு வேட்பாளருக்கு வாக்களித்த தனது கட்சி எம்.எல்.ஏ. குல்தீப் பிஷ்னோயை கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும் காங்கிரஸ் உடனடியாக நீக்கியது.

ஹரியானா மாநிலம் அடம்பூர் சட்டப்பேரவை தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ. குல்தீப் பிஷ்னோய். இவர் கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற ஹரியானா மாநிலங்களவை தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளர் அஜய் மாக்கனுக்கு வாக்களிக்காமல், பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணிகளின் ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர் மீடியா தொழிலதிபர் கார்த்திகேய சர்மாவுக்கு வாக்களித்தார்.

குல்தீப் பிஷ்னோய் பா.ஜ.க. ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளருக்கு ஆதரவு அளித்ததால் காங்கிரஸ் வேட்பாளர் அஜய் மாக்கன் தோல்வி அடைந்தார். இதனால் காங்கிரஸ் தலைமை குல்தீப் பிஷ்னோய் மீது கோபம் அடைந்தது. இதனையடுத்து குல்தீப் பிஷ்னோயை கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்குவதாக அறிவித்தது. இது உடனடியாக அமலுக்கு வருவதாக தெரிவித்தது. முன்னதாக குல்தீப் பிஷ்னோய் டிவிட்டரில், எனக்கு பாம்பின் பேட்டை நசுக்க தெரியும். பாம்புகளுக்கு பயந்து நான் காட்டை விட்டு வெளியே வருவதில்லை என பதிவு செய்து இருந்தார்.

குல்தீப் பிஷ்னோய், பா.ஜ.க. ஆதரவு பெற்ற வேட்பாளருக்கு வாக்களித்தது குறித்து ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் கூறுகையில், குல்தீப் பிஷ்னோய் தன் மனசாட்சியை கேட்டு வாக்களித்தார். மோடி அரசின் கொள்கைகள் மற்றும் சாதனைகளால் ஈர்க்கப்பட்டு அவர் வாக்களித்திருக்க வேண்டும் என்று என்னால் சொல்ல முடியும். காங்கிரஸ் என்ன நடவடிக்கை எடுக்கும் என்று அவர் கவலைப்படவில்லை. நான் அவரை வாழ்த்துக்கிறேன் என தெரிவித்தார்.