அமித் ஷா போல் ஒடமாட்டார்கள்.. சோனியாவும், ராகுலும் அமலாக்கத்துறை முன் ஆஜராவார்கள்.... காங்கிரஸ்
காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி விசாரணைக்காக அமலாக்கத்துறை முன் ஆஜராவார்கள் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது
நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் காங்கிரஸ் தலைவரும், மக்களவை தலைவருமான ராகுல் காந்தி ஆகியோருக்கு அமலாக்கத்துறை அண்மையில் நோட்டீஸ் அனுப்பியது. இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக ஜூன் 8 ம் தேதி (நேற்று) சோனியா காந்தி ஆஜராகுமாறு அமலாக்கத்துறை உத்தரவிட்டு இருந்தது. ஆனால் கொரோனாவிலிருந்து மீண்டு வருவதால், அமலாக்க இயக்குனரகத்தில் ஆஜராக கூடுதல் கால அவகாசம் அளிக்குமாறு கடந்த சில தினங்களுக்கு முன் சோனியா காந்தி வேண்டுகோள் விடுத்தார்.
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோருக்கு அமலாக்கத்துறையிடம் மறைக்க எதுவும் இல்லை. அவர்கள் அமலாக்கத்துறை முன் ஆஜராவார்கள் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா கூறியதாவது: நாங்கள் சட்டத்தை மதிக்கும் கட்சி. நாங்கள் விதிகளை பின்பற்றுகிறோம். எனவே, அவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டால், நிச்சயமாக அவர்கள் (விசாரணைக்கு) செல்வார்கள்.
எங்களிடம் மறைக்க எதுவும் இல்லை. நாங்கள் அவர்களை போல் இல்லை. 2022 முதல் 2013 வரை அமித் ஷா ஒடியது எங்களுக்கு நினைவிருக்கிறது. சத்தியத்தின் பாதையை கடைப்பிடிப்பவர்கள், எப்படிப்பட்டவர்கள் என்பதற்கு அவர்கள் எங்களிடம் இருந்து சில பாடங்களை கற்றுக் கொள்வார்கள். அவர்கள் எங்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.