×

பிரதமர் மோடியை ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் பாராட்டவில்லை ஆனால்..... காங்கிரஸ் விளக்கம்
 

 

பிரதமர் மோடியை ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் பாராட்டவில்லை, உங்களுக்கான மரியாதை உங்களிடம் இருந்து வந்ததில்லை என்று மறைமுகமாக அவமானப்படுத்தியுள்ளார் என்று காங்கிரஸ் விளக்கம் அளித்துள்ளது.


ராஜஸ்தானில் கடந்த சில தினங்களுக்கு முன்  நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில் அம்மாநில முதல்வர் அசோக் கெலாட்டை புகழ்ந்து பேசினார். இதனை குறிப்பிட்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து அசோக் கெலாட் வெளியேறி விடுவார் என்பது போல் சச்சின் பைலட் பேசினார். ராஜஸ்தான் காங்கிரஸ் எம்.எல்.ஏ. சச்சின் பைலட் செய்தியாளர்களிடம் பேசுகையில், பிரதமர் நேற்று முதல்வரை பாராட்டியது சுவாரஸ்யமாக இருக்கிறது. அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. ஏனென்றால், குலாம் நபி ஆசாத்தை பிரதமர் மோடி இதே போல் நாடாளுமன்றத்தில் பாராட்டினார், அதன் பிறகு என்ன நடந்தது என்பதை நாம் அனைவரும் பார்த்தோம் என தெரிவித்தார்.


சச்சின் பைலட் கருத்து குறித்து ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கூறுகையில்,  இது போன்ற கருத்துக்களை கூறக்கூடாது. கட்சியில் உள்ள அனைவரையும் இது போன்ற கருத்துக்களை கூற வேண்டாம் என்று கே.சி.வேணுகோபால் கேட்டுக் கொண்டுள்ளார். ஒவ்வொருவரும் ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என தெரிவித்தார். பிரதமர் மோடியை புகழ்ந்து பேசிய விவகாரம் குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஷிரினேட் கூறியதாவது: அசோக் (கெலாட்) ஜி என்ன பேசினார் என்று என்னிடம் நீங்கள் ஒரு கேள்வி கேட்டீர்கள், எனது சொந்த புரிதல்படி,  அவர் (அசோக் கெலாட்) பிரதமர் மோடியை புகழ்ந்து பேசவில்லை. 

அந்த கூட்டத்தில் மோடி ஜிக்கு ஒரு கண்ணாடியை காட்டினார் என்று நான் நினைக்கிறேன். உங்கள் மரியாதை உங்களிடமிருந்து இல்லை என்று நான் என் அருகில் அமர்ந்திருப்பவரிடம் சொன்னால், உங்கள்  மரியாதை காந்திஜியின் நாடு, நேருஜியின் நாடு, அம்பேத்கர் ஜியின் நாடு, ஜனநாயகம் வலுவாக உள்ள நாட்டிலிருந்து வந்ததே, இது அவமானகரமான விஷயமாக இருக்கும் என்று நினைக்கிறேன். இதில் யார் மரியாதை பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை. ராஜஸ்தானில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைய அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று இருவரும் (அசோக் கெலாட், சச்சின் பைலட்) மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.