’’இதை விட பெரிய தோல்வி இருக்க முடியுமா?’’
இது பாஜகவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று அக்கட்சி தொண்டர்கள் கொண்டாடி வரும் நிலையில், இதை விட பெரிய தோல்வி இருக்க முடியுமா? என்று கேட்டிருக்கிறது.
குஜராத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக அமோக வெற்றியை பெற்றிருக்கிறது. இதுவரைக்கும் பாஜக சந்தித்த வெற்றிகளில் அம்மாநிலத்தில் தற்போது நடந்த தேர்தலில் தான் அமோக வெற்றி பெற்றிருக்கிறது. மொத்தம் உள்ள 182 இடங்களில் 156 இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது. ஏழாவது முறையாக மீண்டும் குஜராத் மாநிலத்தை ஆளும் அதிகாரத்தை பெற்று இருக்கிறது பாஜக.
இந்த வெற்றியை பாஜகவினர் கொண்டாடி வரும் நிலையில் இதை விட பெரிய தோல்வி இருக்க முடியுமா என்று விமர்சித்து இருக்கிறது திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலி. குஜராத் முடிவுகளால் பயப்பட ஏதுமில்லை.
நாடெங்கிலும் குஜராத்தின் சட்டமன்ற தேர்தல் தான் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தன. அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு இது அடித்தளமாக அமையும் என்று குஜராத் தேர்தலை பெரிதும் நம்பி வந்தனர். இந்த நிலையில் குஜராத் தேர்தல் வெற்றியால் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தான் வெற்றி என்று பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர். ஆனால் திமுக குஜராத் முடிவுகளை கண்டு பயப்பட ஏதுமில்லை என்கிறது.
குஜராத் மாநிலத்தில் ஏழாவது முறையாக பாஜக ஆட்சி அமைத்து உள்ளது . அவை அமைத்துள்ளதில் அதிசயம் ஏதுமில்லை. குஜராத்தில் பாஜகவுக்கு வெற்றியை தேடித்தந்தது இலவச வாக்குறுதிகள், மதவாத வாக்குறுதிகள், குஜராத் மண்ணின் மைந்தர் என்பது மட்டுமே. அதனால்தான் தேர்தல் முடிவுகளை பார்த்து உணர்ச்சிவசப்பட்டேன் என்று பிரதமர் சொல்லி இருக்கிறார்.
கடிகாரம் செய்யும் கம்பெனிக்கு பாலம் கட்டும் உரிமையை கொடுத்தது பாஜக அரசு. தொங்கும் பாலம் உடையும் பாலம் ஆனது. 141 பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள். இது இன்னொரு மாநிலத்தில் நடந்திருந்தால் அந்த மாநில அரசே ஆடிப் போயிருக்கும் . ஆனால் இதே தொகுதியில் பாஜக வேட்பாளர் பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். அதற்காக 141 பேர் செத்தது அவர்களது தலைவிதி என்று அந்த தொகுதி மக்கள் நினைத்திருக்க மாட்டார்கள் . அதையும் மீறி பாஜகவுக்கு வாக்களிக்க வேறொன்று பயன்பட்டு இருக்கிறது . அதுதான் இலவசங்கள், மதவாதம் , மண்ணின் மைந்தர் முழக்கம்.
மத்திய அரசின் சாதனைகளுக்கு கிடைத்த வாக்குகள் அல்ல உள்ளூர் வாக்குகளுக்கு கிடைத்து வெற்றியே. பாஜக வாங்கிய வாக்குகள்- 1,67.07,957 பாஜகவுக்கு எதிராக நின்றவர்கள் வாங்கிய மொத்த வாக்குகள் - 3,23,81,808 ஆகும். இதைவிட பெரிய தோல்வி இருக்க முடியுமா என்று கேட்டு, குஜராத் முடிவுகளைப் பார்த்து பயப்பட தேவையில்லை என்கிறது.