×

துப்பாக்கிச்சூடு, ஜெ.,மரணம் குறித்து எடப்பாடி பழனிசாமி மெளனம் காப்பது ஏன்?

 

 

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு மற்றும் ஜெயலலிதா மரணம் குறித்த  ஆணையத்தின் அறிக்கை வெளியாகி ஒரு வாரம் ஆகியும் வாய்  திறக்காமல் மௌன விரதம் இருப்பது ஏன்? என்று எடப்பாடி பழனிச்சாமிக்கு கோவை செல்வராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவை மாவட்ட அதிமுக செயலளரும் முன்னாள் எம்எல்ஏவுமான கோவை செல்வராஜ் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக அரசு அமைத்த நீதிபதி   அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை வெளியாகியிருக்கிறது. அந்த அறிக்கை வெளியிடப்பட்டு ஆறு நாட்களாகியும் அதிமுகவின் தற்காலிக பொதுசெயலாளராக தன்னை அறிவித்து கொண்டுள்ள எடப்பாடி பழனிசாமி  வாய் திறக்காமல் மௌன விரதம் இருக்கிறார். 100 நாட்களாக நடந்த ஸ்டெர்லைட் போராட்டத்தை அமைதி வழியில் தீர்வு காணாமல் துப்பாக்கி சூடு நடத்தி 2 பெண்கள் உள்பட 13 பேரை சுட்டுக் கொன்றது மன்னிக்க முடியாத குற்றமாகும்.

அந்த சம்பவத்தை  தொலைக்காட்சியில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என்று எடப்பாடி சொல்லி இருப்பது  நீதிபதி அருணா ஜெகதீசன்  ஆணையத்தின் அறிக்கையில் அப்பட்டமாக வெளியாகி இருக்கிறது. இதுப்பற்றி எடப்பாடி பழனிச்சாமி பகிரங்க அறிக்கை வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால் எந்த பதிலும் சொல்லாமல் மௌனம் காக்கிறார். தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும், அதற்காக பொறுப்பில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரை அமர்த்தி ஆறு மாதத்திற்குள் பரிந்துரைகளைப் பெற்று உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் 
 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்தும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் தனது அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. 1984 ஆம் ஆண்டு எம்ஜிஆர் உடல்நிலை பாதிப்பு அடைந்த போது அன்றைக்கு சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த எச்.வி.ஹண்டே   அவ்வப்போது அறிக்கைகளை வெளியிட்டு வெளிப்படையாக நடந்து கொண்டார்.  அன்றைய பிரதமர் இந்திரா காந்தி, எம்ஜிஆரை மருத்துவமனைக்கு நேரடியாக சென்று பார்த்து அவருக்கு வெளிநாட்டில் சிகிச்சை பெறுவதற்கான ஏற்பாடுகளை செய்தார் அதன் காரணமாக எம்ஜிஆர் பூரண குணமடைந்து தாயகம் திரும்பினார்.

அதேபோல் முதலமைச்சர் ஜெயலலிதாவையும்  வெளிநாட்டிற்கு அனுப்பி  சிறப்பான சிகிச்சை அளித்திருந்தால் அவர் இன்னும் பத்து அல்லது பதினைந்து ஆண்டு காலம் உயிரோடு இருந்திருப்பார். அவரது உயிரவை காப்பாற்றுவதற்காக அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்றி   வெளிநாட்டுக்கு அனுப்பி சிறந்த சிகிச்சை அளித்திருக்க வேண்டும்.  அவருக்கு வெளிநாட்டு சிகிச்சை வழங்காமல்  தடுத்த அன்றைய அமைச்சர்கள் பகிரங்க குற்றவாளிகளாக அறிவிக்கப்பட வேண்டியவர்கள். அப்போது முதலமைச்சராக இருந்த ஒபிஎஸ், அமைச்சர்கள் தங்கமணி வேலுமணி ஆகியோரிடம் இதுப்பற்றி கேட்டபோது தாங்கள் கலந்து பேசுவதாக சொன்னார்களே தவிர எதுவும் சொல்லவில்லை.

ஜெயலலிதாவின் சாவுக்கு ஓபிஎஸ்ஸூம்  சசிகலாவும் தான் பொறுப்பு என்று சொல்லும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அமைச்சராக இருக்கும்போது  என்ன செய்தார்? ஜெயலிதாவை வெளிநாட்டுக்கு சிகிச்சைக்காக அனுப்ப அவர் உரிய ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும்.  கையாலாகாத நிலை இருந்தால் அமைச்சரவையில் இருந்தே வெளியேறியிருக்கவேண்டும். 

அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டபோது  சிசிடிவி கேமராக்களை அப்புறப்படுத்தி இருக்கிறார்கள். இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளவும் நுரையீரல் பாதிப்புக்கு சரியான சிகிச்சை மேற்கொள்ளவில்லை என்று அப்பல்லோ  மருத்துவமனை மீது ஆணையம் குற்றஞ்சாட்டி இருக்கிறது. வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று ஜெயலிதாவுக்கு  சிகிச்சை அளிக்காததற்கு  அன்றைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீதும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மீதும் ஆணையம் குற்றம் சாட்டி இருக்கிறது.

நீரிழிவு நோய் பாதித்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு, லட்டும் ஜாங்கிரியும் என்று இனிப்புகள் வாரி வழங்கப்பட்டிருக்கிறது என்றால் அவரை கொல்வதில் தான் குறியாக இருந்திருக்கிறார்கள். யாரோ ஒருவரின் நலனுக்காக யாரையோ திருப்திப்படுத்துவதற்காக அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதாவை பார்க்க  யாரையும்  அனுமதிக்கப்படாமல் திரைப்போட்டு மறைத்திருக்கிறார்கள். இதில்  முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர்  மீது ஆறுமுகசாமி ஆணையம் அளித்த பரிந்துரைகள் குறித்த விசாரணை  நடத்தப்பட வேண்டும், அதுகுறித்து  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் 6 கோடி வரை சிகிச்சைக்கான கட்டணம் பெற்ற அப்போலோ மருத்துவமனை ஜெயலலிதாவின் உயிரை காப்பாற்ற வில்லை. மருத்துவமனையில் இருந்தபோது ஜெயலலிதாவை  யாரையும் பார்க்க அனுமதிக்கவில்லை வில்லை சிசிடிவி கேமராக்களை அப்புறப்படுத்தினார்கள்.

இப்படிப்பட்ட மருத்துவமனை மீது  முழுமையான விசாரணை நடத்த வேண்டும். ஆறு மாதத்திற்குள் அந்த விசாரணை அறிக்கையை பெற்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த விசாரணை முடியும்வரை அப்போலோ மருத்துவமனைக்கு சீல் வைத்து இயங்கவிடாமல் தடை செய்ய வேண்டும்.


இது குறித்து முதலமைச்சர் ஸ்டாலினைநேரில்  சந்தித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்க இருக்கிறோம். அவர் அந்தக் கோரிக்கையை ஏற்று விசாரணை நடத்தி தண்டனை வழங்காவிட்டால் அறவழியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவோம்” என்றார்.