×

கமிஷன் மூலம் கொள்ளையடிப்பதில் பா.ஜ.க. மும்முரமாக  ஈடுபட்டுள்ளதால் மாநில முன்னேற்றம் பின்னுக்கு தள்ளப்பட்டது... காங்கிரஸ்

 

40 சதவீத கமிஷன் மூலம் கொள்ளையடிப்பதில் பா.ஜ.க. மும்முரமாக ஈடுபட்டுள்ளதால் கர்நாடகாவின் முன்னேற்றம் பின்னுக்கு தள்ளப்பட்டது என்று அம்மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் தெரிவித்தார்.

கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இதனால் அரசியில் கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், ஆளும் பா.ஜ.க.வுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி மாநிலம் முழுவதும் பஸ் யாத்திரை மேற்கொள்ள உள்ளது. பெலகாவி மாவட்டத்தில் இன்று  பஸ் யாத்திரையை தொடங்குகிறது. நேற்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார், பிரஜாத்வானி பிரச்சார சின்னத்தை வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் சித்தராமையா உள்ளிட்ட காங்கிரஸின் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் பேசுகையில்,  2018 தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளில் 90 சதவீதத்துக்கும் அதிகமானதை மறந்து விட்டு, 40 சதவீத கமிஷன் மூலம் கொள்ளையடிப்பதில் பா.ஜ.க. மும்முரமாக ஈடுபட்டுள்ளதால் கர்நாடகாவின் முன்னேற்றம் பின்னுக்கு தள்ளப்பட்டது. அவர்கள் வகுப்புவாத அரசியலில் கவனம் செலுத்துவதிலும், கொள்கைகளை முடக்குவதிலும் மும்முரமாக இருந்தனர் என தெரிவித்தார். கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா பேசுகையில் கூறியதாவது: பா.ஜ.க. அரசின் ஊழலை வெளிப்படுத்தவும், பா.ஜ.க. அரசின் பொய்களை அம்பலப்படுத்தவும் இந்த பிரச்சாரம் தொடங்கப்படுகிறது.

மக்கள் அரசாங்கத்தால் சலிப்படைந்துள்ளனர். மேலும் வெறுப்பு அரசியல் மற்றும் பழிவாங்கும் அரசியலால், மக்களால் நிம்மதியாக வாழ முடியவில்லை. சட்டம் ஒழுங்கு எந்திரம் மக்களை தோல்வியடையச் செய்துள்ளது. 40 சதவீத கமிஷனில் பா.ஜ.க. அரசு கவனம்செலுத்துவதால், தொற்றுநோய்களின் போது, 3.5 லட்சத்திற்கும் அதிகமான கன்னடர்கள் இறந்தனர். மேலும் அப்பாவி ஒப்பந்தக்காரர்கள் தற்கொலைக்கு தள்ளப்பட்டனர். முதல்வர் பசவராஜ் பொம்மை பா.ஜ.க.வின் உயர் தலைமையின் கைகளில் பொம்மையாக செயல்படுகிறார். கர்நாடகாவின் அபிலாஷைகள் புறக்கணிக்கப்பட்டன. கன்னடர்களின் குரல் நசுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.