பா.ஜ.க. அரசு தேசிய கல்வி கொள்கையை நாக்பூர் (ஆர்.எஸ்.எஸ்.) கொள்கையாக மாற்றியுள்ளது.... டி.கே. சிவகுமார் குற்றச்சாட்டு
பா.ஜ.க. அரசு தேசிய கல்வி கொள்கையை நாக்பூர் கொள்கையாக மாற்றியுள்ளது என்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் குற்றம் சாட்டினார்.
கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. அண்மையில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான அரசு , 2022 நவம்பர் முதல் மாநிலம் முழுவதும் உள்ள 20 ஆயிரம் அங்கன்வாடிகள் மற்றும் பள்ளிகளில் தேசிய கல்வி கொள்கை (என்.இ.பி.) 2020, குழந்தை பருவ பராமரிப்பு மற்றம் கல்வியில் (முந்தைய நிலை) செயல்படுத்தப்படும் என்று அறிவித்தது.
மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கை 2020க்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கர்நாடகாவில் இன்னும் சில மாதங்களில் புதிய கல்வி கொள்கை அறிமுகப்படுத்தப்பட உள்ளது குறித்து அம்மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் கூறியதாவது: கர்நாடக அரசு இந்திய அரசியலின் வரலாற்றை மாற்ற முயல்கிறது. மகாத்மா காந்திஜி இந்திய சுதந்திர போராட்டத்தை வழிநடத்தினார், அவரை மட்டுமே உண்மையான மகாத்மா என்று அழைக்கப்பட முடியும்.
தற்போதைய அரசாங்கம் தேசிய கல்விக் கொள்கையை நாக்பூர் (ஆர்.எஸ்.எஸ்.) கல்விக் கொள்கையாக மாற்றியுள்ளது. இது மூளையற்ற அரசு. அடுத்த சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் காங்கிரஸூக்கு வாக்களிப்பார்கள், அவர்களின் (மத்திய பா.ஜ.க. அரசு) கல்விக் கொள்கை மற்றும் அரசியல் நோக்கத்தை நாங்கள் அகற்றுவோம் என்று நான் நம்புகிறேன். அவர்கள் தங்கள் தனிப்பட்ட செயல்திட்டங்களால் நிரப்பட்ட வரலாற்றை மாற்ற விரும்புகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.