×

திமுக அரசு டிஸ்மிஸ் - ஜனாதிபதி ஆட்சி அமல்: எச்.ராஜா ஏற்படுத்திய பரபரப்பு

 

தமிழ்நாடு விவகாரத்தில் ஆளுநருக்கு எதிராக திமுகவினர் தொடர்ந்து எழுப்பி வரும் கண்டனங்களால் பாஜக கொதித்தெழுந்திருக்கிறது.  திமுகவின் பேச்சாளர்கள் சீனியர்கள் ஆளுநரை மிகவும் கடுமையாக பேசியதோடு அல்லாமல் முதல்வரே கடுமையாக ஆளுநரை விமர்சித்த தால் பாஜக கடும் அதிருப்தியில் இருக்கிறது. 

 இந்நிலையில் டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,  தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக இருப்பதாகவும்,   தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியலையும் அளித்ததாக  தகவல் பரவுகிறது.   இதையெல்லாம் காரணம் காட்டி திமுக அரசை கலைத்துவிட்டு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தப் போவதாக பாஜகவினர் கூறிய வருகின்றனர் .

ஒட்டுமொத்த தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த முடியாவிட்டாலும் தமிழகத்தின் சில பகுதிகளில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த முடியும்.  அதற்கு சட்டத்தில் வகை உள்ளது என்று முன்னரே பாஜகவின் மூத்த தலைவர் எச். ராஜா கூறியிருந்தார்.

  இது ஒருபுறம் இருக்க,  2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலோடு சேர்த்து சட்டமன்றத் தேர்தலையும் நடத்த பாஜக தலைமை ஆலோசனை நடத்தி வருவதாகவும்,  தமிழகத்தில் ஆட்சியை கலைத்துவிட்டு நாடாளுமன்ற தேர்தலோடு சேர்த்து தமிழகத்தின் சட்டமன்றத் தேர்தலையும் நடத்த பாஜக முடிவு எடுத்து இருப்பதாக ஒரு தகவல் பரவுகிறது.  இதற்கு திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியில் கடும் கண்டனம் தெரிவித்து தலையங்கம் எழுதப்பட்டிருந்தது.

 குஜராத்தில் இப்போதுதான் சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது.  அப்படி என்றால் அந்த மாநில  ஆட்சியையும் கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க போகிறதா பாஜக .  தவிர, பாஜக ஆளும் மாநிலங்களில் எல்லாம் ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தலை நடத்தப் போகிறார்களா? இது சரிப்பட்டு வருமா? எதற்கு இந்த வேண்டாத வேலை என்று முரசொலியில் அது குறித்து கடும் கண்டனம் எழுப்பப்பட்டிருந்தது.

 இந்த நிலையில்,  ’அது என்ன ஜனவரி என்றாலே திமுக ஆட்சிக்கு டேஞ்சர் தான் போல’ என்று எச். ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் இரண்டு நாளிதழ் தலையங்க பக்கங்களை வெளியிட்டு இருக்கிறார்.   கருணாநிதி முதல்வராக இருந்த போது திமுக அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்ட செய்தி அது.   ‘திமுக அரசு டிஸ்மிஸ் -ஜனாதிபதி ஆட்சி பிரகடனம்-சட்டசபை கலைப்பு’ என்றும்,   ’லஞ்சம் -அதிகார துஷ்பிரயோகம் -பிரிவினை- கருணாநிதி மந்திரி சபை டிஸ்மிஸ்! ஜனாதிபதி ஆட்சி அமல்’ என்றும் அந்த நாளிதழ்களில் தலைப்புச் செய்தியாக இடம் பெற்று இருக்கிறது.

 எச். ராஜாவின் இந்த டுவிட்டர் பதிவு தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.