×

திமுக ஐடி விங் விவகாரம் - ஸ்டாலினிடம் புகார் சொன்ன டிஆர்பாலு 
 

 


திமுகவின் ஐடி விங் ஆறாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் நேரத்தில் ஐடி விங் தொடர்பான சலசலப்பும் அக்கட்சியினரிடையே எழுந்திருக்கிறது.
 திமுக ஐடி விங் விவகாரத்தில் செந்தில்குமார் எம். பி யை கடிந்து கொண்ட டி. ஆர். பாலு,  முதல்வர் ஸ்டாலினிடமும் புகார் கூறியிருக்கிறார் என்கிறார்கள்.

பி. டி. ஆர். பழனிவேல் ராஜன் தலைமையில் இயங்கி வந்த  திமுகவின் ஐ. டி விங்  , தொடர்ச்சியான விமர்சனங்களை சந்தித்து வந்ததை அடுத்து டிஆர்பி ராஜா எம்எல்ஏவின் பொறுப்பில் இயங்கி வருகிறது.   

 இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக அமைச்சர்கள் மீது சுமத்தி வரும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுக ஐடி விங் சில பதிவுகளை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு இருந்தது .  இதற்கு 100 பேர் மட்டுமே லைக் செய்திருந்தனர்.  திமுக எம்பி செந்தில்குமார் இதை சுட்டிக்காட்டி,  திமுக தகவல் தொழில்நுட்ப அணிக்கு அனைத்து மாவட்டங்களிலும் இருக்கும் உறுப்பினர் எண்ணிக்கைக்கு ஒரு பதிவுக்கு 6 மணி நேரத்தில் ஒரு லட்சம் பேர் ஆதரவு தெரிவித்து இருக்க வேண்டும் .  ஆனால் அண்ணாமலைக்கு எதிரான அந்த பதிவுக்கு 6 மணி நேரத்தில் வெறும் 240 லைக்குகள் மட்டுமே வந்திருக்கின்றன என்று விமர்சித்திருந்தார்.

 அதற்கு திமுக ஐடி விங் செயலாளர் டிஆர்பி ராஜா,   செயல்படாத நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதிலளித்திருந்தார்.  உடனே  எம்.பி.செந்தில்குமார்,  24 மணி நேரமும் என்ன செய்தனர் என்பதை தினமும் 6 மணிக்கு ஐடி அணி நிர்வாகிகள் இடம் தர வேண்டும்.  இதைச் செய்தால் மட்டுமே திமுக மீது பற்று கொண்ட பெரும் போர்ப்படையை உருவாக்க முடியும் என்று ஆலோசனை கூறினார். 

 தன் பொறுப்பில் உள்ள நிர்வாகத்திற்கு எம் .பி. செந்தில்குமார் ஆலோசனை சொன்னது,  அதுவும் பொதுவெளியில் ஆலோசனை சொன்னது டிஆர்பி ராஜாவை ரொம்பவே அப்செட் ஆக்கியிருக்கிறது.

 திமுகவின் ஐடி விங் விவகாரத்தில் திமுகவின் எம்பி பொதுவெளியில் விமர்சித்து இருந்ததால் அதிருப்தியில் இருந்த  டிஆர்பி ராஜா , தனது தந்தையும் திமுக பொருளாளருமான டிஆர்.பாலுவிடம் சொல்ல,  அவர் செந்தில்குமார் எம்.பியை  தொலைபேசியில் அழைத்து கடிந்துகொண்டாராம். அதுமட்டுமல்லாமல் இந்த விவகாரம் குறித்து,  செந்தில்குமார் பொதுவெளியில் செய்த விமர்சனம் குறித்து முதல்வரிடம் புகார் கூறியிருக்கிறாராம் டி.ஆர்.பாலு.