பி.கே.வை வைத்து ரஜினிகாந்தை சரிக்கட்டிய திமுக - கராத்தே பரபரப்பு
கடந்த சட்டமன்றத் தேர்தலில் ரஜினிகாந்த் போட்டியிடுவார் என்று அவரது ரசிகர்களும் வெறித்தனமாக எதிர்பார்த்திருந்த நிலையில் திடீரென்று உடல் நிலையை காரணம் காட்டி பின் வாங்கிய ரஜினி பின்னர் இனி எந்த காலத்திலும் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று உறுதியாக அறிவித்தார்.
அப்போது அவர் உடல் நிலையை காரணம் காட்டி இருந்தாலும் ரஜினியின் இந்த திடீர் பல்டிக்கு காரணம் திமுக தான் என்கிறார் கராத்தே தியாகராஜன். பிரசாந்த் கிஷோர் மூலமாக திமுக தான் ரஜினியை திடீர் பல்டி அடிக்க வைத்தது என்று சொல்கிறார்.
காங்கிரசிலிருந்து விலகிய கராத்தே தியாகராஜன் எந்தக் கட்சியிலும் இணையாமல் இருந்தார். ரஜினியின் மிக நெருங்கிய நண்பரான அவர் ரஜினி கட்சி தொடங்கியதும் அதில் இணைந்து முக்கிய பொறுப்பினை பெறுவது என்ற முடிவில் உறுதியாக இருந்தார். ரஜினி கட்சி தொடங்குவார் நல்லாட்சியை தருவார் என்று அடிக்கடி அறிக்கைகள் மூலமாக, பேட்டிகள் மூலமாக சொல்லி வந்தார். ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று உறுதியாக அறிவித்த பின்னர்தான் அவர் பாஜகவில் இணைந்தார்.
இந்த நிலையில் நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மண்டல தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். களப்பணி ஆற்றி வரும் தியாகராஜன் சென்னை நங்கநல்லூரில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர், பிரசாந்த் கிஷோரை வைத்து அந்த அண்ணாமலையை சரிகட்டி விட்டீர்கள். ஆனால் பாஜக தலைவர் அண்ணாமலையை உங்களால் சரிக்கட்ட முடியாது. பாஜக தலைவர் அண்ணாமலைக்கு வேறு ஒரு முகம் இருக்கிறது. ஒரு முகத்தை தான் தற்போது நீங்கள் பார்த்து இருப்பீர்கள் என்று சொல்லி திமுக வை எச்சரிக்கும் விதமாக தெரிவித்தார்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவின் தேர்தல் வியூக வகுப்பாளராக இருந்தவர் பிரசாந்த் கிஷோர். அவர் மூலமாகத்தான் ரஜினியின் அரசியல் வருகையை சரிக்கட்டியது திமுக என்று கராத்தே பேசியிருப்பது தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.