×

தெலுங்கு படத்தில் வரும் அமைச்சர்களைப் போல் உள்ளார்கள் திமுக அமைச்சர்கள் - ஜெயக்குமார் விளாசல்

 

 தெலுங்கு படத்தில் வரும் அமைச்சர்களைப் போல உள்ளார்கள் திமுக அமைச்சர்கள் என்று கடுமையாக விளாசி எடுத்திருக்கிறார் ஜெயக்குமார்.  ஜெயலலிதா இருந்திருந்தால் ஆ.ராசாவை குண்டர் சட்டத்தில் கைது செய்திருப்பார்.  முதல்வர் ஸ்டாலின் ஆ.ராவை குண்டர் சட்டத்தில் கைது செய்வாரா என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.

 அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி இரண்டாவது முறையாக அதிமுக தலைமை அலுவலகம் சென்றிருக்கிறார்.   ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தலைமை கழக நிர்வாகிகள், சென்னை, திருவள்ளூர் ,காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

 இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,   திமுக அமைச்சர்களையும், திமுக எம்பி ஆ.ராசாவையும்  கடுமையாக விளாசி எடுத்துள்ளார்.

 திமுக அமைச்சர்கள் ஏதோ வானத்திலிருந்து குதித்தவர்களை போல நினைத்துக் கொள்கின்றார்கள்.   அவர்கள் ஜமீன்கள் போல,  குறுநில மன்னர்களை போல தங்களை நினைத்துக் கொள்கின்றார்கள் .  பதவி வந்ததும் அவர்களின் தோரணை மாறி இருக்கிறது என்றார்.

 அவர் மேலும் அது குறித்து,   தெலுங்கு படத்தில் வரும் அமைச்சர்களை போல் உள்ளார்கள் திமுக அமைச்சர்கள் என்றார். தொடர்ந்து திமுக அமைச்சர்கள் குறித்து ஜெயக்குமார்,   பெண்கள் ஓசியில் பயணம் செய்கிறார்கள் என்று அமைச்சர் பொன்முடி பேசியது பெண் இனத்தையே அவமானப்படுத்துகின்ற செயல்.  அரசாங்க பணத்தில் பெண்கள் பேருந்துகளில் பயணம் செய்கின்றார்கள்.   பொன்முடியின் அப்பா வீட்டு காசிலா பெண்கள் ஓசியில் பயணம் செய்கிறார்கள் என்று கடுமையாக சாடினார்.

இந்து மதத்தையும் இந்துக்கள் குறித்தும் திமுக எம்பி ஆ . ராசா  தரக்குறைவாக பேசியதாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டு குறித்து,    இந்தியாவில் மனுஸ்மிருதி ஆட்சியா நடக்குது?  சட்டத்தின் ஆட்சிதான் நடக்குது.    மக்கள் விலைவாசி உயர்வால் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.  விவாதிக்க வேண்டிய பிரச்சனைகள் நிறைய இருக்கும்போது தேவையற்ற  சர்ச்சை கருத்துக்களை சொல்லி மக்களை திசை திருப்புகிற முயற்சியில் ஈடுபடுகிறது திமுக.    ஜெயலலிதா இருந்திருந்தால் இப்படி பேசியவர்களே குண்டர் சட்டத்தில் கைது செய்திருப்பார்.  முதல்வர் மு. க. ஸ்டாலின் ஒரு நேர்மையான, விருப்பு வெறுப்பற்ற, அனைவருக்கும் பொதுவான முதல்வராக இருப்பார் என்று ஆ.ராசாவை  குண்டர் சட்டத்தில் கைது செய்வராரா? என்று கேட்டிருக்கிறார்.