ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற எம்.பிக்களிடம் கையெழுத்து வாங்கும் திமுக
ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற எம்.பிக்களை சென்னை அண்ணா அறிவாலயம் வரவழைத்து கையெழுத்து வாங்குகிறது திமுக .
தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவியை திரும்பப் பெறக் கோரி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு எம்பி கடிதம் எழுதி இருக்கிறார். ஒத்த கருத்து உடைய எம்பிக்கள் அண்ணா அறிவாலயம் வந்து கோரிக்கை மனுவை படித்துப் பார்த்து கையெழுத்திட வலியுறுத்தி இருக்கிறார். திமுக மற்றும் ஒத்த கருத்து உடைய எம்பிக்கள் நாளைக்குள் அண்ணா அறிவாலயம் வந்து கையெழுத்திட வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.
தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என். ரவி நியமிக்கப்பட்டது முதல் திமுக தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. திமுகவின் கூட்டணி கட்சியினரும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஆளுநர் ரவியை திரும்ப பெற வலியுறுத்தி மக்களவையில் திமுக சார்பில் கவனயீர்ப்பு தீர்மான நோட்டீஸ் ஒன்றை அளித்தார் டி. ஆர். பாலு . கடந்த ஏப்ரல் மாதத்தில் இதன் மீது விவாதம் நடத்த சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை. நீட் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் திமுக அரசுக்கும் ஆளுநர் ரவிக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருவதால், அவரை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி குடியரசுத் தலைவருக்கு தற்போது திமுக கடிதம் எழுதுகிறது.