×

தாலி அறுப்பு போராட்டத்தை நடத்தியவர்களுக்கு துணை போகும் திமுக ..  பாஜக விளாசல்

 

பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம் எனும் பெயரில்  படித்த பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில்,  தாலிக்கு வழங்கும் திட்டத்தை நிறுத்திவிட்டுதான் அதே பெயரில் மாணவிகளுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தினை தமிழ்நாடு அரசு பட்ஜெட்டில் அறிவித்து இருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்திருக்கின்றன.

மூவலூர் ராமாமிர்தம் திருமண நிதியுதவித் திட்டப்படி தாலிக்கு தங்கம் மற்றும் நிதியுதவி என்பது ரூ.40,000 மதிப்புள்ள தங்கக்காசு, ரூ.50,000 நிதி என மொத்தம்  ரூ.90,000 மதிப்புள்ள உதவிகள் கிடைக்கின்றன. தினமும் ரூ.200 வருவாய் ஈட்டும் குடும்பங்களுக்கு  ரூ.90,000 மதிப்புள்ள உதவிகள் எவ்வளவு முக்கியம்? என்பதை சொல்லித் தெரிந்துகொள்ள வேண்டியதில்லை. அவ்வளவு பயனுள்ள திட்டத்தை அரசு ரத்து செய்தால், ஏழைகள் மோசமான பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்கிறார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்தக்கூடாது என்று  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனும் வலியுறுத்தி இருக்கிறார்.

இது குறித்து தமிழக பாஜக செய்தி தொடர்பாளர்  நாராயணன் திருப்பதி,   ‘’திமுக ஹிந்து விரோத, தமிழர் விரோத கட்சி என்பதை மறுபடியும் ஒரு முறை நிரூபித்துள்ளது. தமிழர்களின் கலாச்சாரமான, தமிழ் பெண்கள் புனிதமாக கருதுகிற, 'தாலிக்கு தங்கம்' வழங்கும் திட்டத்தை ஒழித்து விட்டது தமிழக அரசு. பயனாளிகளை சரியாக தேர்வு செய்ய முடியாததால் இந்த திட்டத்தை கைவிடுவதாக கூறியிருப்பது வடிகட்டிய பொய்.  வன்மையாக கண்டிக்கத்தக்கது. தாலி அறுப்பு போராட்டத்தை நடத்தியவர்களுக்கு துணை போகும் திமுக அரசின் உள்நோக்கமே இந்த திட்டத்தை ஒழிப்பதில் உள்ள ஆர்வத்தை காட்டுகிறது. 
தாலியே வேண்டாம் எனும் போது தங்கம் எதற்கு என்று கேட்பார்களோ?’’ என்ற கேள்வியை எழுப்புகிறார்.