×

சிறுவர்கள் சிலர் கருணை மற்றும் பணிவை கற்றுக் கொள்ள வேண்டும்... தேஜஸ்வி யாதவுக்கு குட்டு வைத்த பா.ஜ.க. அமைச்சர்

 

குடியரசு தலைவர் தேர்தல் வேட்பாளர் திரௌபதி முர்முவை சிலை என்று மறைமுகமாக விமர்சனம் செய்த தேஜஸ்வி யாதவுக்கு, சிறுவர்கள் சிலர் கருணை மற்றும் பணிவை கற்றுக் கொள்ள வேண்டும் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் குட்டு வைத்தார். 

பீகார் சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவரும், ராஷ்டிரிய  ஜனதா தளத்தின் தலைவருமான தேஜஸ்வி யாதவ் நேற்று முன்தினம் குடியரசு தலைவர் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் திரௌபதி முா்முவை விமர்சனம் செய்தார். தேஜஸ்வி யாதவ் கூறுகையில், எங்களுக்கு ராஷ்டிரபதி பவனில் எந்த சிலையும் (செயல்படாத நபர்) வேண்டாம். யஷ்வந்த் சின்ஹாவின் பேச்சை எப்போதும் நீங்கள் கேட்டிருப்பீர்கள் ஆனால் ஆளும் கட்சியின் குடியரசு தலைவர் வேட்பாளர் (திரௌபதி முர்மு) பேச்சை நாங்கள் கேட்கவே இல்லை. அவர் வேட்பாளராக ஆனதில் இருந்து இதுவரை ஒரு செய்தியாளர் சந்திப்பு கூட நடத்தவில்லை என்று தெரிவித்தார்.

திரௌபதி முர்முவை மறைமுகமாக சிலை என்று விமர்சனம் செய்த தேஜஸ்வி யாதவுக்கு மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் குட்டு வைத்துள்ளார். தர்மேந்திர பிரதான் டிவிட்டரில், மிகப் பிரபலமான ரப்பர் ஸ்டாம்பை உருவாக்கிய வரலாற்றை கொண்டவர்கள், தடைகளை தகர்த்து அடிமட்டத்தில் இருந்து உயர்ந்த குடியரசு தலைவர் வேட்பாளரை அவமதிக்கிறார்கள். வெள்ளி கரண்டியுடன் உள்ள சிறுவர்கள் சிலர் கருணை மற்றும் பணிவை கற்றுக் கொள்ள வேண்டும். ராஷ்டிரபதி பவன் வம்சங்களின் கொல்லைப்புறம் அல்ல என பதிவு செய்துள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று குடியரசு தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் கட்சியான பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரௌபதி முர்மு போட்டியிடுகிறார். எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறார்.