×

கட்சியை நடத்த நிதிஷ் அழைத்தாரா?  பிரசாந்த் கிஷோரால் பீகார் அரசியலில் பரபரப்பு

 

பீகார் அரசியலில் பரபரப்பையும் சலசலப்பையும் ஏற்படுத்தி இருக்கிறார் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர்.  பீகார் முதல்வர் நிதீஷ் குமார் தனது கட்சியை வழிநடத்தும்படி கேட்டுக் கொண்டதாக பிரசாந்த் கிஷோர் சொன்னதால்தான் இத்தகைய பரபரப்பும் சலசலப்பும் ஏற்பட்டுள்ளது.

 தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் கடந்த 2018 ஆம் ஆண்டில் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் சேர்ந்தார்.  அடுத்த சில நாட்களிலேயே கட்சியின் தேசிய துணைத்தலைவர் பதவியும் பிரசாந்த் கிஷோருக்கு கிடைத்தது . அதன் பின்னர்  நிதிஷ்குமாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் கட்சியில் இருந்து விலகினார் பிரசாந்த் கிஷோர்.  

 இந்தியாவில் பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு அவர் அரசியல் ஆலோசனைகளை வழங்கி வந்தார்.   இந்நிலையில் பீகாரில் கடந்த அக்டோபர் இரண்டாம் தேதி முதல் 3500 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஜன் சுராஜ் என்கிற விழிப்புணர்வு பிரச்சார பயணத்தினை மேற்கொண்டுள்ளார் பிரசாந்த் கிஷோர்.   அந்த நடை பயணத்தின் போது செய்தியாளர்களிடம் பேசுவையில்,   2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் நிதிஷ்குமார் என்னை அழைத்து உதவி கேட்டார் .  இதன் பின்னர் 2015 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மகாத் பந்தன் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக வெற்றி பெற அவருக்கு நான் உதவி செய்தேன். இன்று எனக்கு அறிவுரை வழங்கும் அளவுக்கு அவருக்கு மன உறுதி இருக்கிறது.

 நாடு முழுவதும் எனது திறமையை நிரூபித்த பின்னர் இப்போது என் சொந்த மாநிலத்தில் வேலை செய்ய முயற்சிக்கிறேன்.  10 நாட்களுக்கு முன்பு நிதீஷ் குமார் என்னை அவரது இல்லத்திற்கு அழைத்தார் .  அப்போது தனது கட்சியை வழிநடத்தும்படி என்னிடம் கேட்டார்.  ஆனால் அது சாத்தியமில்லை என்று நான் சொல்லி விட்டேன். 

 ஏனென்றால் 3500 கி.மீ. தூரம் நடந்து சென்று கிராமங்களில் உள்ளவர்களை சந்திப்பேன். என்று மக்களுக்கு வாக்குறுதி அளித்திருக்கிறேன்.   எந்த பதவிக்காகவும் நான் செய்த உறுதிப்பாட்டை என்னால் திரும்பி பெற முடியாது.   இதற்காகத்தான் நிதிஷ் குமாரின் அழைப்பை நான் ஏற்க மறுத்து விட்டேன் என்று தெரிவித்திருக்கிறார்.