ஓபிஎஸ் கையாடல் செய்தாரா? கட்சியில் இருந்து நீக்க ஏற்பாடு
இணை ஒருங்கிணைப்பாளர், முதல்வர் வேட்பாளர், எதிர்க்கட்சித் தலைவர் என்று தொடர்ந்து விட்டுக் கொடுத்துக் கொண்டே வந்த ஓ. பன்னீர்செல்வம் பொதுச் செயலாளர் விவகாரத்திலும் விட்டுக் கொடுத்து விடுவார் என்று எதிர்பார்த்து இருந்திருக்கிறார் எடப்பாடி. எல்லாவற்றையும் விட்டுக் கொடுத்த ஓ. பன்னீர்செல்வம் இதை விட்டுக் கொடுத்து விட்டால் தான் கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்டு விடுவோம் என்பதை உணர்ந்து இந்த முறை பிடி கொடுக்காமல் இருக்கிறார்.
ஆனால் எடப்பாடி பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் என்று தனது பக்கம் பெரும் ஆதரவு படையை சேர்த்துக்கொண்டு மோதலில் இறங்கி இருக்கிறார். எப்படியும் பொதுச்செயலாளர் ஆகியே தீருவேன் என்று அவர் கங்கணம் கட்டிக் கொண்டு நிற்கிறார். ஒவ்வொரு பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் 5 லட்சம் முதல் 25 லட்சம் ரூபாய் வரைக்கும் பணம் கொடுத்து விலைக்கு வாங்கி இருக்கிறார்கள் எடப்பாடி ஆதரவாளர்கள் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார் .
பொதுக்குழு உறுப்பினர்களாலோ, மாவட்ட செயலாளர்களாலோ தேர்ந்தெடுக்கப்பட கூடிய பதவி அல்ல அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவி. அது கட்சியின் உறுப்பினர்களால் தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய பதவி. மாவட்ட செயலாளர்களையும் பொதுக்குழு உறுப்பினர்களை வேண்டுமானால் எடப்பாடி விலை கொடுத்து வாங்கி இருக்கலாம். ஒட்டுமொத்த ஒன்றரை கோடி கட்சித் தொண்டர்களையும் எப்படி அவர்கள் விலை கொடுத்து வாங்க முடியும்? என்ற கேள்விகளை எழுப்பி வருகிறார்கள் ஓ. பன்னீர்செல்வம் தரப்பினர்.
எடப்பாடிக்கு எதிராக தொடர் சட்டப் போராட்டத்தையும் நடத்தி வருகிறார் ஓ.பன்னீர் செல்வம். ஒருங்கிணைப்பாளர் என்கிற பலத்தில் மோதலில் ஈடுபட்டு வந்ததால் ஒருங்கிணைப்பாளர் என்கிற கையை ஒடித்து ஓபிஎஸ்சின் பலத்தை குறைத்தார் எடப்பாடி. தற்போது பொருளாளர் என்கிற பலத்தையும் குறைக்க அவர் முடிவெடுத்து இருப்பதாக தகவல்.
ஓ. பன்னீர் செல்வத்திலும் பொருளாளர் பதவியை பறித்து அவரை கட்சியின் அடிமட்ட தொண்டராக்கி அதன் பின்னர் கட்சியை விட்டு நீக்கிவிட முடிவெடுத்திருக்கிறார் என்று தகவல். கட்சியில் இருப்பதால்தானே அவர் சட்டப் போராட்டம் நடத்துகிறார். பொறுப்புகளில் இருந்தும் கட்சிகளில் இருந்தும் அதனால் நீக்கிவிட எடப்பாடி தரப்பு தீவிரமாக ஆலோசித்து வருகிறது .
பன்னீர்செல்வம் பொருளாளராக இருந்த பொழுது பல முறைகேடுகளையும் கையாடல்களையும் செய்திருக்கிறார் என்ற குற்றம் சாட்டி அந்த காரணங்களை சுட்டிக்காட்டி அவரை கட்சியில் இருந்து நீக்க முடிவு எடுத்திருக்கிறார் எடப்பாடி. அதனால்தான் அதிமுகவின் முன்னாள் ஐடி விங் நிர்வாகி அஸ்பயர் சுவாமிநாதன், ‘’ஓபிஎஸ் அவர்களும் பொருளாளராக இருந்த பொழுது பல முறைகேடுகளையும், கையாடல்கலையும் செய்துள்ளார் என்ற புகார் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்தக் காரணங்களை சுட்டிக்காட்டி அவரும் விரைவில் நீக்கப்படுவாரா? பொறுத்திருந்து பார்ப்போம்’’ என இப்படி ஒரு பதிவை போட்டு இருக்கிறார் என்று தெரிகிறது.