×

நத்தம் விஸ்வநாதனை அடிக்க பாய்ந்தாரா வைத்திலிங்கம்? நடந்தது என்ன? 

 


ஓ. பன்னீர்செல்வம்,  எடப்பாடி பழனிச்சாமி இருவரும் பிரிவதற்கு முன்னால் நடந்த அதிமுக கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் ஒற்றைத்தலைமை விவகாரத்தில் நத்தம் விஸ்வநாதனை வைத்திலிங்கம் அடுத்த பாய்ந்தார் என்று எடப்பாடி பழனிச்சாமியின் தீவிர ஆதரவாளர் தங்கமணி சொல்வதற்கு ஓபிஎஸ் ஆதரவாளர் ஜே. சி. டி. பிரபாகர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

 சென்னை பசுமைவழிச் சாலையில் இருக்கும் ஓ. பன்னீர்செல்வம் இல்லத்தில் ஜேசிடி பிரபாகர் செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது தங்கமணியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்தார்.    கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் நத்தம் விஸ்வநாதனை வைத்திலிங்கம் அடிக்க பாயவில்லை.  அடிக்க பாய்ந்தார் என்று தங்கமணி தவறான தகவல்களை ஊடகங்களில் வெளியிட்டு வருகிறார். எடப்பாடி அணியில் பொய்யை சொல்வதற்கு இதுவரை ஜெயக்குமார் மட்டுமே இருந்தார்.  இப்போது தங்கமணியும் இணைந்து விட்டார் என்கிறார்.

 தொடர்ந்து அவர் அதிமுக விவகாரம் குறித்து பேசினார்.   தர்ம யுத்தத்தின் போது தனக்கு பதவி கிடைக்காவிட்டாலும் கட்சி உடைந்து போய்விடக் கூடாது என்பதற்காக அதிமுக ஒன்றிணைக்க சம்மதித்தார் ஓபிஎஸ்.    இணைந்த போது எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் அளித்த ஒரு வாக்குறுதியைக் கூட நிறைவேற்றவில்லை.  அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் ஓபிஎஸ்தான் என்று தங்கமணியும்,  வேலுமணியும் சொன்னார்கள் .   ஆனால் அதன்படியும் நடந்து கொள்ளவில்லை.

 ஜெயலலிதா இருக்கும் வரை டெல்லி செல்லும் போது ஓபிஎஸ்ஐ தான் அழைத்துச் செல்வார்.  ஒரு முறை கூட எடப்பாடியை அழைத்துச் செல்லவில்லை.  பிரதமர் மோடி ஓபிஎஸ்- இபிஎஸ் இருவரையும் டெல்லிக்கு அழைத்த போது ஓபிஎஸ் உடன் செல்ல மறுத்துவிட்டார் இபிஎஸ்.  தனியாகச் சென்றார்.    ஓபிஎஸ் அதற்கும் அமைதி காத்தார். கடந்த ஜூன் மூன்றாம் தேதி அதிமுக பொது குழுவின் ஒற்றை தலைமை குறித்து முடிவு செய்ய வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது?  முந்தைய டிசம்பர் மாதம் தானே ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் பதவி தேர்வு செய்யப்பட்டது? என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் பேசிய பிரபாகர்,   சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்விக்கு எடப்பாடி பழனிச்சாமி தான் காரணம்.  ஒவ்வொரு முறை தேர்தலிலும் வேட்பாளர்கள் தேர்வு கூட்டணி கட்சியுடன் பேச்சு வார்த்தை என்று ஒவ்வொன்றிற்கும் தனித்தனி குழு அமைக்கப்பட்டு ஆலோசனை அடிப்படையில் அந்த குழுக்கள் செயல்படும்.  ஆனால் இந்த நடைமுறைகளை எல்லாம் முழுவதுமாக மாற்றி விட்டால் எடப்பாடி பழனிச்சாமி.  இதனால்தான் தேர்தலில் அதிமுக தோல்வியடைந்தது என்றார்.  ஓபிஎஸ்சால் அதிமுக தோல்வி அடைந்தது என்ற எடப்பாடி அணியின் குற்றச்சாட்டுக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

 கட்சியின் பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக ஓபிஎஸ்க்கு இணை பொதுச் செயலாளர்பதவி தருகிறோம் என்று சமாதானம் பேசினார்கள் தங்கமணியும் வேலு மணியும்.  இந்த பதவியை தருவதற்கு இவர்கள் யார்? என்று ஆவேசமானார் பிரபாகர்.  மேலும் பேசிய ஜேசிடி பிரபாகர் ,  விரைவில் சென்னையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது.  அதற்கான இடத்தை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் விரைவில் அறிவிப்பார் என்று தெரிவித்து எடப்பாடி அணிக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறார்.