காமராஜருக்கு திமுகதான் கல்லறை கட்டியதா? பகிரங்க மன்னிப்பு கேட்கும் வரைக்கும் ஆர்ப்பாட்டம்
திமுகவினரின் கட்டை விரலை வெட்டுவேன் என்றார் காமராஜர். ஆனால், அவருக்கு கல்லறை கட்டியதே நாம் தான் என்று தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜரை இழிவாக பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர். எஸ் பாரதி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் . அப்படி மன்னிப்பு கேட்கவில்லை என்றால் ஆர். எஸ். பாரதியை கண்டித்து சென்னையில் நவம்பர் 1ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும், மன்னிப்பு கோரும் வரை காந்திய வழியில் தொடர் அறப்போராட்டங்கள் நடத்துவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது .
நம்மை அழிக்க நினைத்தவர்கள் என்ன ஆனார்கள் என்று நமக்கு தெரியும். காமராஜர் திமுகவினரின் கட்டைவிரலை வெட்டுவேன் என்றார். ஆனால் அவருக்கு கல்லறை கட்டியதே நாம் தான். நாம் கட்டிய கல்லறையைத்தான் இன்றும் பூஜித்துக்கொண்டிருக்கிறார்கள் என்று ஆர்.எஸ்.பாரதி பேசியதற்கு எதிராக நாடார் சங்கங்கள் கொதித்து எழுந்துள்ளன.
ஜி.கே.வாசன், மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட காங்கிரஸ் பிரமுகர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். பெருந்தலைவர் அப்படி பேசக்கூடிய நபர் அல்ல என்று தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் நெல்லை தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கம் சார்பில் அனைத்து நாடார் சங்க ஆலோசனை கூட்டம் ஆலந்தூரில் நடந்தது. நெல்லை தூத்துக்குடி நாடாளுமன்ற பரிபாலன சங்கத் தலைவர் என். பத்மநாப நாடார் தலைமையில் இன்று நடந்தது.
இந்த கூட்டத்தில் ஆர். எஸ். பாரதியை கண்டித்து அனைத்து நாடார் சங்கங்களும் ஒன்று கூடி கண்டன ஆர்ப்பாட்டம் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த வேண்டும் என்று நிர்வாகிகள் ஆவேசப்பட்டார்கள். இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
காமராஜர் பற்றி அவதூராக பேசிய ஆர். எஸ். பாரதி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும், ஆர். எஸ்.பாரதியை கண்டித்து சென்னையில் நவம்பர் 1ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும், அவர் வருத்தம் தெரிவிக்கும் வரையில் காந்திய வழியில் தொடர் அறப்போராட்டங்கள் நடத்த வேண்டும், அனைத்து போராட்டங்களையும் தலைவர் பத்மநாபன் நாடார் தலைமையில் நடத்த வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.