×

மோடி ஜி,  மோர்பி தொங்கு பாலம் விபத்து கடவுளின் செயலா அல்லது மோசடி செயலா?.. திக்விஜய சிங் தாக்கு
 

 

மோடி ஜி,  மோர்பி தொங்கு பாலம் விபத்து கடவுளின் செயலா அல்லது மோசடி செயலா? என்று  பிரதமரை கேள்வியால் திக்விஜய சிங் தாக்கினார்.

19ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின்போது, குஜராத் மாநிலம் மோர்பி நகரில் உள்ள மச்சு நிதி மீது 233 மீட்டர் நீள தொங்கு பாலம் அமைக்கப்பட்டது. பொதுமக்களின் முக்கிய சுற்றுலா இடமாக இந்த பாலம் விளங்குகிறது. இந்நிலையில் புனரமைப்பு பணிக்காக தொங்கு பாலம் மூடப்பட்டது. கடந்த 7 மாதங்களாக தொங்கு பாலத்தில் தனியார் நிறுவனம் புனரமைப்பு பணிகளை மேற்கொண்டது. புனரமைப்பு பணிகள் முடிவடைந்ததையடுத்து, குஜராத்தின் புத்தாண்டு தினத்தன்று (அக்டோபர் 26) தொங்கு பாலம் மீண்டும் திறக்கப்பட்டது. 

கடந்த ஞாயிற்றுக்கிழமை தொங்கு பாலத்தில் மக்கள் கூட்டம் அலை மோதியது. அப்போது பொதுமக்களின் எடையை தாங்க முடியாமல் அந்த பாலம் அறுந்து விபத்து ஏற்பட்டது. பாலத்தில் இருந்தவர்கள் நதியில் விழுந்தனர். தீயணைப்பு படையினர், தேசிய பேரிடர் மீட்புப் பணியினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் சுமார் 150 பேர் உயிரிழந்ததாக தகவல். இந்நிலையில் 2016ல் கொல்கத்தாவில் பாலம் இடிந்து பலர் உயிர் இழந்தபோது பிரதமர் மோடி, மம்தா பானர்ஜிஅரசை விமர்சனம் செய்த அதே வார்த்தைகளை குறிப்பிட்டு மோர்பி தொங்கு பாலம் விபத்தில் பிரதமரை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளன.


 
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய சிங் டிவிட்டரில், மோடி ஜி,  மோர்பி பாலம் விபத்து கடவுளின் செயலா அல்லது மோசடி செயலா? கொல்கத்தா பாலம் இடிந்து விழுந்ததை மோடி ஜி விளக்கியதை போல பண ஆதாயங்களுக்காக கட்டுமானத்தின் தரம் சமரசம் செய்யப்படுவதால் இந்த பேரழிவுகள் நிகழ்ந்தன என தெரிவித்தார். ஆம் ஆத்மி தலைவர் சவுரப் பரத்வாஜ் கூறுகையில், மோடி முன்பு மேற்கு வங்கத்தில் கூறினார்- இது கடவுளின் செயல் அல்ல, இது மோசடி செயல் என தெரிவித்தார்.