×

ஓ.பி.சி. பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை 14 சதவீதமாக குறைத்தற்கு பா.ஜ.க. அரசு வெட்கப்பட வேண்டும்.. திக்விஜய சிங்

 

ஓ.பி.சி. பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை 27 சதவீதத்திலிருந்து 14 சதவீதமாக குறைத்தற்கு மத்திய பிரதேச பா.ஜ.க. அரசு வெட்கப்பட வேண்டும் என காங்கிரஸின் திக்விஜய சிங் தாக்கினார்.

உச்ச நீதிமன்றம் கடந்த புதன்கிழமையன்று, மத்திய பிரதேசத்தின் உள்ளாட்சி தேர்தலில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓ.பி.சி.) வழங்க அனுமதி அளித்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் வரவேற்றார். மேலும், சமூகத்திற்கான இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்த அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளையும் எனது அரசாங்கம் எடுத்தது என தெரிவித்தார். ஆனால் எதிர்க்கட்சியான காங்கிரஸோ, ஓ.பி.சி. பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை 27 சதவீதத்திலிருந்து 14 சதவீதமாக குறைத்தற்கு பா.ஜ.க. அரசு வெட்கப்பட வேண்டும் என தாக்கியது.


திக்விஜய சிங் இது தொடர்பாக கூறியதாவது: முதல்வர் கொண்டாடுகிறார். ஆனால் அதை (இடஒதுக்கீடு) 27 சதவீதத்தில் இருந்து 14 சதவீதமாக குறைத்ததற்காக அவர் வெட்கப்பட வேண்டும். பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டில் மோடி அரசு ஏன் திருத்தம் கொண்டு வரவில்லை. இடஒதுக்கீடு 50 சதவீதத்துக்கு மேல் இருக்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் கூறியது, அதாவது மற்ற வகுப்பினருக்கு 16 சதவீதம் மற்றும் 20 சதவீத இடஒதுக்கீட்டையும் குறைக்க முடியாது, மீதமுள்ள 14 சதவீதம் மட்டுமே ஓ.பி.சி.களுக்கு இடஒதுக்கீடு கிடைக்கும். 

முன்பு ஓ.பி.சி.களுக்கு 27 சதவீதம் இடஒதுக்கீடு கிடைத்தது. இதன் பொருள் பஞ்சாயத்துக்களின் ஓ.பி.சி.க்கான பதவி பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. எங்கள் ஆட்சியில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கினோம். அவர்களை (ஓ.பி.சி.) தொடர்பான பா.ஜ.க.வின் நோக்கம் நல்லதல்ல. தேர்தலை நடத்தினால் பஞ்சாயத்துக்கள் மற்றும் மாநகராட்சிகளிலிருந்து மிரட்டி பணம் பறிக்க முடியாது என்பதால் அவர்கள் அரசியலமைப்பை பின்பற்றவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.