×

ரஜினி சொன்னது ஒத்துப்போகிறதா? அப்படி கேட்ட வாய் எல்லாம் இன்று எங்கே போயின?

 

கடந்த மூன்று தினங்களாக  ‘அன்றே சொன்னார் ரஜினி’, ‘நான் தான்டா ரஜினிகாந்த்’ என்ற ஹேஷ்டேக்குகள் டுவிட்டர் தளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.   தூத்துக்குடி கலவரத்திற்கு ரஜினி கொடுத்த வாய்ஸ் அப்போது அவருக்கு எதிராக திரும்பினாலும்,  தற்போது கள்ளக்குறிச்சி கலவரத்திற்கு பொருத்தமாக இருக்கிறது என்று பரபரப்பு பேச்சு எழுந்திருக்கிறது.


தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்களின் போராட்டம் வன்முறையாக வெடித்ததற்கு சமூக விரோதிகள் ஊடுருவியதன் காரணம் என்று அன்று ரஜினி சொன்ன கருத்து அன்று சர்ச்சையானது.  அதற்கு ரஜினி விளக்கம் அளித்த போது,  வன்முறையை தூண்டிவிட்டது சமூக விரோதிகளாக இருப்பார்கள் என்று நினைத்தேன் என்றார். 

 தூத்துக்குடி சம்பவத்தில் ரஜினி அப்படி சொன்ன போது போராட்டம் நடத்துபவர்கள் எல்லாம் சமூக விரோதியா? என்று பலரும் கொதித்து எழுந்தார்கள்.  ஆனால் தற்போது கள்ளக்குறிச்சி கலவரத்தில் ரஜினி அன்று சொன்னது ஒத்துப் போகிறது என்கிறார்கள்.  


 கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவியின் மரணம் தொடர்பான விவகாரத்தில் நடந்த  வன்முறை தமிழக அரசை ஆட்டம் காண வைத்திருக்கிறது .  மாணவர்கள் என்கிற போர்வையில் பல்வேறு அமைப்பினர் இணைந்து திட்டமிட்டு நடத்திய போராட்டம் தான் வன்முறையாக வெடித்திருக்கிறது.  இதை திட்டமிட்டு நடத்தி இருப்பதாக நீதிமன்றமே தெரிவித்திருக்கிறது. 

இந்த நிலையில் தூத்துக்குடி- கள்ளக்குறிச்சி சம்பவங்களை மேற்கோள்காட்டி இருக்கும் ரஜினி ரசிகர்கள்,   ’அன்றே சொன்னார்’,  ’ நான் தாண்டா ரஜினிகாந்த்’ போன்ற ஹேஷ்டேக்குகளை ட்விட்டரில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

 ரஜினி அன்று சொன்ன கருத்து தற்போது கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு ஒத்துப் போகிறதா? அன்று போராட்டம் செய்தால் சமூக விரோதியா என்று கேட்ட வாய் எல்லாம் இன்று எங்கே போயின? என்ற கேள்வி எழுப்புகிறார்கள் ரசிகர்கள் .  தமிழக பாஜக செயலாளர் வினோத் பி. செல்வமும் ‘அன்றே சொன்னார் ரஜினி’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார் .  கடந்த இரண்டு தினங்களாகவே  ரஜினி குறித்து இந்த ஹேஷ்டேக்குகள் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.