×

இரட்டை இலை.. இதே போன்ற நிலையில்தான் முன்பு முடக்கப்பட்டது - டிடிவி தினகரன்

 

இடைத்தேர்தலை சாக்கடை என்று விமர்சித்த ஈவிகேஎஸ் இளங்கோவன் இப்போது ஏன் அதே சாக்கடையில் இறங்குகிறார் என்ற கேள்வியை எழுப்பினார் டிடிவி தினகரன்.  அவர் மேலும்,  இதே போன்ற நிலையில்தான் முன்பு இரட்டை இலை முடக்கப்பட்டது என்றும் கூறினார். 

 ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது.  காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் களம் இறங்கி இருக்கிறார்.   நாம் தமிழர் கட்சி அங்கே தனித்துப் போட்டியிடுகிறது.   மக்கள் நீதி மய்யம் கட்சி,  ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவு தெரிவித்து இருக்கிறது. அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி அணி வேட்பாளரும், பன்னீர்செல்வம் அணி வேட்பாளரும் போட்டியிட இருக்கிறார்கள்.   இதனால் இரண்டு பேரும் இரட்டை இலை சின்னத்தை கேட்டு நிற்கிறார்கள்.  அமமுக வேட்பாளராக சிவபிரசாந்த் களம் இறங்கி இருக்கிறார். 

 இது குறித்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார்.

 இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெறுவோம் என்கிற நம்பிக்கையில் தான் போட்டியிடுகின்றோம்.  அதிக வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் அதையும் தாண்டி மக்கள் எங்களுக்கு ஒரு வாய்ப்பை தருவார்கள் என்று நம்புகிறோம்.  இதற்காக ஒரு சில கட்சிகளிடம் ஆதரவுக்காக சந்திக்கவும் இருக்கிறோம் என்றார். 

 அதிமுக விவகாரம் குறித்து பேசிய போது,  ஓபிஎஸ் -இபிஎஸ் ரெண்டு பேரும்  சின்னம் வேண்டும் என்றால் இரட்டை இலை சின்னம் கிடைக்காது.  இப்படித்தான் 2017ஆம் ஆண்டில் இதே போன்ற நிலையில் தான் சின்னம் முடக்கப்பட்டது என்றார்.

 ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிடுவது குறித்த கேள்விக்கு,  இடைத்தேர்தல் என்றால் சாக்கடை என்று முன்பு சொல்லி இருந்தார் இளங்கோவன்.  அவரே இப்போது அதே சாக்கடையில் ஏன் இறங்கி இருக்கிறார் என்ற கேள்வியை எழுப்பினார்.  மேலும்,  இளங்கோவன் ஒன்றும் வெல்ல முடியாத வேட்பாளர் அல்ல.  2019 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேனியில் அவர் தோல்வி அடைந்திருக்கிறார் என்றார் தினகரன்.