×

மக்களின் ஆதரவால் ஆர்.எஸ்.எஸ். நின்றுவிடவில்லை வளர்ந்து கொண்டே இருந்தது.. காங்கிரஸூக்கு பதிலடி கொடுத்த வைத்யா

 

தடுக்க முயன்றனர் ஆனால் மக்களின் ஆதரவை நாங்கள் தொடர்ந்து பெற்றதால் ஆர்.எஸ்.எஸ். நின்றுவிடவில்லை வளர்ந்து கொண்டே இருந்தது என்று காங்கிரஸூக்கு எம்.வைத்யா பதிலடி கொடுத்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி தனது டிவிட்டர் பக்கத்தில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சீருடை தீப்பற்றி எரியும் படத்தை பதிவேற்றம் செய்து, வெறுப்பின் கட்டுகளிலிருந்து நாட்டை விடுவித்து, பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ்.  செய்த சேதங்களை அகற்ற வேண்டும். படிப்படியாக நாங்கள் எங்கள் இலக்கை அடைவோம் என்று பதிவு செய்து இருந்தது. 

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ரஷீத் ஆல்வி கூறுகையில், இந்த டிவிட்டின் ஒவ்வொரு வார்த்தையும் உண்மை. ஆர்.எஸ்.எஸ்.-ன் பெரும்பாலான புத்தகங்களும், அவற்றின் வெளியீடுகளும் மத நல்லிணக்கத்திற்கு எதிரான சூழலை உருவாக்குவதை பற்றி பேசுகின்றன. இந்து-முஸ்லிம் பிரிவினை செய்வதை தவிர, அவர்களுக்கு வேறு வேலை இல்லை என தெரிவித்தார். காங்கிரஸின் குற்றச்சாட்டுக்கு ஆர்.எஸ்.எஸ். பதிலடி கொடுத்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்.-ன் எம்.வைத்யா டிவிட்டரில், அவர்கள் (காங்கிரஸ்) மக்களை வெறுப்புடன் இணைக்க விரும்புகிறார்கள். அவர்கள் நீண்ட காலமாக எங்கள் மீது வெறுப்பை வளர்த்து வருகின்றனர். அவர்களின் தந்தையும், தாத்தாவும் ஆர்.எஸ்.எஸ்.-ஐ தடுக்க முயன்றனர். ஆனால்  மக்களின் ஆதரவை நாங்கள் தொடர்ந்து பெற்றதால் ஆர்.எஸ்.எஸ். நின்றுவிடவில்லை வளர்ந்து கொண்டே இருந்தது என பதிவு செய்து இருந்தார்.