×

சொந்த ஊரில் ஓபிஎஸ்க்கு  அதிர்ச்சி கொடுத்த இபிஎஸ் 

 

சொந்த ஊரிலேயே  ஓபிஎஸ்க்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் இபிஎஸ்.  

 தேனி மாவட்டத்தில் ஓபிஎஸ் சொந்த ஊரான பெரிய குளத்தில் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் அவ்வப்போது ஓபிஎஸ்-க்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து வருகிறார்கள். இந்நிலையில் அதிமுகவின் பிரச்சனை தொடர்பான வழக்கில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வர வேண்டும் என்று வேண்டிக் கொண்டு கடந்த 40 நாட்களாக விரதம் இருந்து பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையாக புறப்பட்ட சென்றிருக்கிறார் எடப்பாடி ஆதரவாளர்.

வழக்கில் எடப்பாடி வெற்றி பெற வேண்டும் என்றும்,  அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் ஆன எடப்பாடி பழனிச்சாமி நிரந்தர பொதுச் செயலாளர் ஆக வேண்டும் என்றும்,  முதல்வராக வரவேண்டும் என்றும் தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுரேஷ் என்பவர் பழனி முருகன் கோவிலுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து  இன்று பாதயாத்திரை மேற்கொண்டு இருக்கிறார்.

 பெரியகுளத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து பாதயாத்திரையாக பயணம் மேற்கொண்ட அவருக்கு முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பெரிய வீரன் உள்ளிட்ட நிர்வாகிகள் மாலை  அணிவித்து பொன்னாடை போர்த்தி வழி அனுப்பி வைத்திருக்கிறார்கள். 

 எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஓபிஎஸ் சட்டப் போராட்டம் நடத்தி வரும் நிலையில் அவரது சொந்த ஊரிலேயே எடப்பாடி பழனிச்சாமி அந்த சட்ட போராட்டத்தில் வெற்றி பெற வேண்டும் என்று ஆதரவாளர்கள் விரதம் இருந்து பாதயாத்திரை மேற்கொள்வது பெரியகுளம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.