×

எடப்பாடியால் தேர்தல் ஆணையத்திற்கு நேர்ந்த அவமானம்!

 

அதிமுகவின் மூத்த தலைவர் கே.சி.பழனிச்சாமி.   எம்.ஜி.ஆர். ஆட்சியில் எம்.எல்.ஏவாகவும்,  ஜெயலலிதா ஆட்சியில் எம்.பியாகவும் இருந்தவர். அவர் தற்போது எடப்பாடி அணியினர் எடுத்து வரும் தடாலடி முடிவுகளுக்கு கண்டனம் தெரிவித்து ஓபிஎஸ் -இபிஎஸ் இருவரும் ஒன்று பட வேண்டும்.  ஒன்றுபட்ட அதிமுக வேண்டுமென்று அதற்கான முயற்சிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

எம்.ஜி.ஆர். வகுத்து வைத்திருந்த விதிகளில் திருத்தம் செய்து அதிமுகவில் உட்கட்சி தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை கடாசிவிட்டு  எடப்பாடிபழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளர் ஆகியிருக்கிறார்.

இது குறித்து கேசி பழனிச்சாமி,   ’’ஓபிஎஸ்  இபிஎஸ் இருவருமே இணைந்த அணிகளுக்கு சின்னத்தை கொடுங்க. ஆனால் விதிகளை திருத்துவதை அனுமதிக்க கூடாது என்றுதான் தேர்தல் ஆணையத்தில் சொன்னேன். ஆனால் தேர்தல் ஆணையம் பாஜகவின் அழுத்தம் காரணமாக இரட்டைத்தலைமையை உருவாக்கியபோது அங்கீகரித்தார்கள். அதன் விளைவுதான் அதிமுகவுக்கு இந்த ஒரு அவல நிலை வந்திருக்கிறது’’என்று தெரிவித்திருந்தார்.

அவர் தற்போது,   ‘’கடந்த டிசம்பரில் ஒற்றை ஓட்டில் இரட்டை தலைமை தேர்ந்தெடுக்கப்பட்டது.   தேர்தல் ஆணையம் அங்கிகரித்தது.   பொதுக்குழு அங்கீகரிக்கவில்லை என்று  ரத்து செய்கிறார்கள்.  தேர்தல் ஆணையம் உயர்ந்ததா ? அல்லது பொதுக்குழு உயர்ந்ததா ? ஜனநாயகத்தை நிலைநாட்டுகிற தேர்தல் ஆணையத்திற்கு அவமானம் அல்லவா ?’’என்று கேட்கிறார்.

எடப்பாடி பழனிச்சாமியின் செயலால் தேர்தல் ஆணையத்திற்கு அவமானம் நேர்ந்திருக்கிறது என்பதை குறிப்பிடுகிறார் கேசி பழனிச்சாமி. இது அதிமுகவிற்குள் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.